ஐபிஎல் கிரிக்கெட்டின் இறுதிப் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், அறிமுக அணியான குஜராத் டைட்டன்ஸ் அணியும் இம்முறை கோப்பைக்காக பலப்பரீட்சை நடத்தின. முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணியில் ஜெய்ஸ்வால் அவுட்டாகி வெளியேற, பட்லரும் கேப்டன் சஞ்சு சாம்சனும் கூட்டணி அமைத்து சிறப்பாக விளையாடி வந்தனர். அப்போது 9வது ஓவரில் பந்துவீச வந்தார் கேப்டன் ஹர்திக் பாண்டியா. தான் வீசிய முதல் ஓவரின் 2வது பந்தில் கேப்டன் சஞ்சு சாம்சன் விக்கெட்டை வீழ்த்தி அதிர வைத்தார் கேப்டன் ஹர்திக்.
அந்த முதல் ஓவரில் வெறும் ஒரு ரன்னை மட்டுமே விட்டுக் கொடுத்தார் ஹர்திக். அவர் வீசிய 2வது ஓவரில் விக்கெட் விழவில்லை என்றாலும் 4 ரன்களை மட்டுமே ராஜஸ்தான் அணியால் எடுக்க முடிந்தது. அடுத்து அவர் வீசிய 3வது ஓவரில் முதல் பந்திலேயே ராஜஸ்தானுக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. அதிரடி வீரர் பட்லரின் விக்கெட்டை அசால்ட்டாக வீழ்த்தினார் ஹர்திக் பாண்டியா. ராஜஸ்தான் பேட்டிங் ஆர்டரின் மொத்த நம்பிக்கையும் தூள் தூளான தருணம் அது. அந்த 3வது ஓவரிலும் 3 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்தார். அவர் வீசிய 4வது ஓவரில் 2 பவுண்டரிகளை விளாசிய ஹெட்மேயரை அந்த ஓவரின் கடைசிப் பந்தில் வீழ்த்தி கணக்கை நேர் செய்துவிட்டார் ஹர்திக்.
மொத்தமாக 17 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 3 பெரும் தலைகளின் விக்கெட்டுகளை சாய்த்து அசத்தினார் ஹர்திக். ஹர்திக்கின் இந்த அபாரமான பந்துவீச்சை சமூக ஊடகங்களில் ரசிகர்கள் பாராட்டினர். அடுத்து குஜராத் அணி பேட்டிங்க் செய்யும்போது 23 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அப்போது களத்திற்கு வந்தார் கேப்டன் ஹர்திக் பாண்டியா.
நெருக்கடியை உணர்ந்து ஹர்திக் பொறுப்புடன் விளையாட ஆரம்பித்ததால் ரன் ரேட் உயரத் துவங்கியது. பிரஷித் வீசிய 9வது ஓவரில் ஹர்திக், கில் இருவரும் தலா ஒரு பவுண்டரி விளாச, குஜராத் கூடாரத்தில் நம்பிக்கை பரவத் துவங்கியது. மெக்காய் ஓவரில் ஹர்திக் தன் பங்குக்கு மற்றொரு பவுண்டரியும் அடிக்க இலக்கை நோக்கி வேகமாக முன்னேறியது குஜராத் அணி.
அஸ்வின் வீசிய 12வது ஓவரில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸர் விளாசி வான வேடிக்கை காட்டினார் ஹர்திக் பாண்டியா. ஆனால் சஹால் பந்துவீச்சில் 34 ரன்கள் சேர்த்த நிலையில் ஹர்திக் அவுட்டாக அடுத்து வந்த மில்லர் அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றார். 3 விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு மட்டுமல்லாமல் நெருக்கடியான தருணத்தில் 34 ரன்கள் சேர்த்து அணியின் வெற்றிக்கு உதவினார் ஹர்திக் பாண்டியா.
கடந்த உலகக் கோப்பையில் பெரிய அளவில் சோபிக்காத ஹர்திக் பாண்டியா தற்போது சிறந்த ஆல் ரவுண்டர் என்பதை நிருபிக்கும் வகையில் விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.