வெற்றி பெற்றாலும் ஆஸ்திரேலிய அணியின் தயவால் அரையிறுதிக்குள் நுழைந்த நியூசிலாந்து? எப்படி?

வெற்றி பெற்றாலும் ஆஸ்திரேலிய அணியின் தயவால் அரையிறுதிக்குள் நுழைந்த நியூசிலாந்து? எப்படி?
வெற்றி பெற்றாலும் ஆஸ்திரேலிய அணியின் தயவால் அரையிறுதிக்குள் நுழைந்த நியூசிலாந்து? எப்படி?
Published on

நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் அயர்லாந்து வீரர் ஜோசுவா லிட்டில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று முக்கியமான இரண்டு லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. இதில் அடிலெய்டில் இந்திய நேரப்படி காலை 9.30 மணிக்கு தொடங்கிய ஆட்டம் ஒன்றில் நியூசிலாந்து - அயர்லாந்து அணிகள் மோதின. இந்த ஆட்டத்துக்கான டாசில் வென்ற அயர்லாந்து அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் குவித்தது.

இப்போட்டியில் நியூசிலாந்து அணி கேப்டன் வில்லியம்சன் அதிரடியாக ஆடி அரை சதம் அடித்தார். அவர் 35 பந்துகளில் 61 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஜோசுவா லிட்டில் பந்து வீச்சில் 'கேட்ச்' கொடுத்து அவுட் ஆனார். இதையடுத்து களமிறங்கிய நீஷம், முதல் பந்திலேயே எல்.பி.டபிள்யூ. முறையில் ஆட்டம் இழந்து ஏமாற்றம் அளித்தார். இதையடுத்து வந்த சாண்ட்னெரும் எல்.பி.டபிள்யூ முறையில் ஆட்டம் இழந்தார். இதனால் லிட்டில் ஷாட்ரிக் விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.

இதையடுத்து 186 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய அயர்லாந்து அணி, 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 150 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அந்த அணியில் அதிகபட்சமாக தொடக்க பேட்ஸ்மேன்கள் பால் ஸ்டிர்லிங் 37 ரன்களும், ஆண்ட்ரூ பால்பிர்னி 30 ரன்களும் சேர்த்தனர். இதன்மூலம் நியூசிலாந்து அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்து அணியின் அரை இறுதி வாய்ப்பு ஏறத்தாழ உறுதியானது. இருப்பினும், அதிகாரப்பூர்வமாக போட்டி முடிந்த உடன் உறுதி செய்ய முடியவில்லை. ஆஸ்திரேலிய, இங்கிலாந்து அணிகளின் ரன் ரேட்டை பொறுத்து மாறும் நிலையே இருந்தது.

சொதப்பிய ஆஸ்திரேலிய - அரையிறுதிக்குள் நுழைந்த நியூசிலாந்து

இன்றைய போட்டிகள் துவங்குவதற்கு முன்பு நியூசிலாந்து, இங்கிலாந்து, ஆஸ்திரேலிய அணிகள் தலா இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றும், ஒரு போட்டி மழையால் ரத்தாகியும் என தலா 5 புள்ளிகளுடன் இருந்தன. இருப்பினும் ரன் ரேட் அடிப்படையில் நியூசிலாந்து அணி முதலிடத்திலும், இங்கிலாந்து இரண்டாம் இடத்திலும், ஆஸ்திரேலிய அணி மூன்றாவது இடத்திலும் இருந்தன. இன்றையப் போட்டிகளில் வெற்றி தோல்விகளை பொறுத்து அரையிறுதி வாய்ப்பு உறுதியாகும் நிலை இருந்தது. நியூசிலாந்து அணி அயர்லாந்துக்கு எதிரான போட்டியில் 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இருப்பினும், ஆஸ்திரேலிய, இங்கிலாந்து அணிகளின் போட்டி முடிவுகளுக்காக அது காத்திருக்க வேண்டியிருந்தது. 

இந்த மூன்று அணிகளிலும் ஆஸ்திரேலிய அணியின் ரன் ரேட் குறைவாக இருப்பதால் அந்த அணிக்குதான் நெருக்கடி அதிகமாக இருந்தது. ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான இன்றையப் போட்டியில் 185 ரன்கள் அடிக்க வேண்டிய நிலை அந்த அணிக்கு இருந்தது.அப்படி அடித்தால்தான் ரன் ரேட் வித்தியாசத்தில் முன்னிலை பெறமுடியும். ஆனால், ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரானப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்து 8 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால், ரன் ரேட் அடிப்படையில் நியூசிலாந்து அணிக்கு ஆஸ்திரேலிய அணி வழிவிட்டுள்ளது. ஆஸ்திரேலிய அணியின் பேட்டிங் சொதப்பலால் நியூசிலாந்து அணி அதிகாரப்பூர்வமாக அரையிறுதிக்கு முதல் அணியாக நுழைந்துள்ளது. 

இங்கிலாந்து - ஆஸ்திரேலிய அணிகளிடையே மோதல்!

நியூசிலாந்து அணி அரையிறுதிக்கு நுழைந்துவிட்ட நிலையில், தற்போது ஆஸ்திரேலிய இங்கிலாந்து அணிகளுக்கு இடையில்தான் போட்டி நிலவுகிறது. அரையிறுதிக்கு இன்னொரு அணியாக யார் தேர்வாவது என்பதுதான் அந்தப் போட்டி. அந்த வகையில் ஆப்கானிஸ்தான் அணியை 106 ரன்களுக்கு ஆஸ்திரேலியா கட்டுப்படுத்த வேண்டும். இங்கிலாந்து அணி நாளை இலங்கை அணியை எதிர்கொள்கிறது. அந்தப் போட்டியில் எந்த மார்ஜினில் இங்கிலாந்து அணி வெற்றி பெறுகிறது என்பதை பொறுத்து ஆஸ்திரேலிய அணியின் அரையிறுதி வாய்ப்பு உறுதியாகும். நாளையப் போட்டியில் இங்கிலாந்து அணி தோற்றுவிட்டால் ஆஸ்திரேலியா ஜோராக அரையிறுதிக்கு சென்றுவிடும். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com