ஐபிஎல் போட்டிகளில் தற்போது அதிகபட்ச விலை மதிப்புள்ள அணியைவிட, 15 மடங்கு கூடுதல் விலைக்கு புதிய அணிகள் ஏலம் எடுக்கப்பட்டுள்ளன. பில்லியன் டாலர் பணம் கொழிக்கும் ஐபிஎல் புதிய அணிகளின் பண விளையாட்டு குறித்து தெரிந்துகொள்வோம்.
'சச்சின் விளையாடுகிறார். பிரச்சாரத்துக்கு அப்புறம் வாருங்கள்' கடந்த காலங்களில் தொலைக்காட்சி முன்பு கிரிக்கெட் பார்த்தவர்களின் ஒரே குரலாக இருந்தது இதுதான். இதை மனதில் கொண்டே இந்தியாவில் பல விளையாட்டு சேனல்கள் உருவாகின்றன. இந்த வரிசையில் கடந்த 2006-ஆம் ஆண்டு, இந்தியாவில் கிரிக்கெட் ஒளிபரப்பு உரிமையை கைப்பற்ற முயன்று Zee தொலைக்காட்சி தோல்வியை சந்தித்தது. இதையடுத்து நாமே ஏன் ஒரு கிரிக்கெட் தொடரை நடத்தக் கூடாது என தொடங்கியதுதான் Indian Cricket League எனப்படும் ICL தொடர்.
2 ஆண்டுகள் மட்டுமே நடைபெற்ற தொடருக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் அங்கீகாரம் வழங்கவில்லை. மேலும், ஐசிஎல் தொடரால் கிடைக்கும் வருமானத்தை கவனத்தில் கொண்ட பிசிசிஐ, நாமே ஏன் ஒரு தொடரை உருவாக்கக் கூடாது என்ற எண்ணத்தில் உதித்ததுதான் ஐபிஎல் எனப்படும் இந்தியன் பிரிமீயர் லீக்.
2008-ஆம் ஆண்டு அணிகள் ஏலம் விடப்பட்டபோது, மும்பை அணியை அதிகபட்சமாக 467 கோடிக்கு ஏலம் எடுத்தார் முகேஷ் அம்பானி. 13 ஆண்டுகளில் அது கிட்டத்தட்ட 15 மடங்காக அதிகரித்துள்ளது. துபாயில் நடைபெற்ற ஏலத்தில் லக்னோவை மையமாகக் கொண்ட அணியை, ஆர்பிஎஸ்ஜி குழுமம் 7,090 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்துள்ளது. இந்த முதலீடு குறித்து ஆர்பிஎஸ்ஜி குழும உரிமையாளர் கோயங்கா கூறுகையில், தங்களது முதலீட்டுக்குரிய மதிப்பு வருங்காலங்களில் அதிகரிக்கும் என்றும், 10 ஆண்டுகளில் பல மடங்காக உயரும் என்றும் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் ஒளிபரப்பு உரிமையை ஸ்டார் தொலைக்காட்சி கடந்த 2018-ஆம் ஆண்டு 5 ஆண்டுகளுக்கு 16 ஆயிரத்து 347 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்தது. இந்த தொகையிலிருந்து சுமார் 60 முதல் 70 விழுக்காடு வரையிலான பங்கு அணி உரிமையாளர்களுக்கு வழங்கப்படுகிறது. தற்போது 10 அணிகள் விளையாடும் நிலையில், 2023 ஆம் ஆண்டு ஒளிபரப்பு உரிமை ஏலம் விடப்படும்போது, எவ்வளவு தொகைக்கு போகும் என்றே கணிக்க முடியாத நிலை உள்ளது. மேலும், ஐபிஎல் Title Sponser, டிக்கெட் விற்பனை மூலம் அணிகளுக்கான பங்கை பிசிசிஐ வழங்குகிறது.
இவைதவிர ஒவ்வொரு அணியும் தங்களது நகரை மையமாகக் கொண்டு தங்களை மிகப்பெரிய வணிக நிறுவனமாகவே மாற்றிவிடுகின்றன. வீரர்கள் அணியும் உடையில் அச்சிடப்படும் விளம்பரங்கள் மூலம் வருவாயை குவிக்கின்றன. மேலும், ஒவ்வொரு தீவிர ரசிகரையும் தங்களது வருமானகவே பார்க்கின்றன ஐபிஎல் அணிகள்.
ஓர் அணியின் T-Shirt 3000 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. ஒரு தொப்பி ஆயிரம் ரூபாய் வரை விலை நிர்ணயிக்கப்படுகிறது. சிகை அலங்காரம் தொடங்கி செருப்பு விற்பனை வரை விளம்பரதாரர் நிறுவனங்கள் வருவாயை ஐபிஎல்-லுக்கு கொடுக்கின்றன. 10 விநாடி விளம்பரத்துக்கு 14 லட்சம் ரூபாய் வரை வசூலிக்கப்படுவதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் கூறுகின்றன. ஐபிஎல் அணிக்கான முதலீடு என்பது, முதலுக்கு மோசம் இல்லாத பெரும் வர்த்தக விளையாட்டவே நீடிக்கிறது.
அணிகளின் மதிப்பு
மும்பை இந்தியன்ஸ் - ரூ.447.6 கோடி
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - ரூ.446 கோடி
டெக்கான் சார்ஜர்ஸ் - ரூ.428 கோடி
சென்னை சூப்பர் கிங்ஸ் - ரூ.364 கோடி
டெல்லி கேப்பிட்டல்ஸ் - ரூ.336 கோடி
பஞ்சாப் கிங்ஸ் - ரூ.304 கோடி
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ரூ.300 கோடி
ராஜஸ்தான் ராயல்ஸ் - ரூ.268 கோடி
கொச்சி டஸ்கர்ஸ் - ரூ.1,533 கோடி
சாஹாரா வாரியர்ஸ் புனே - ரூ.1,702 கோடி
சிவிசி கேப்பிட்டல்ஸ் - ரூ.5,600 கோடி
ஆர்.பி.எஸ்.ஜி. குழுமம் - ரூ.7,090 கோடி