ஐபிஎல் போட்டிகளில் மரியாதையாக நடத்தப்படாததால் இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் பங்கேற்கவில்லை என வெஸ்ட் இண்டீஸ் வீரர் கிறிஸ் கெய்ல் வெளிப்படையாக தெரிவித்துள்ளார். ஐபிஎல் தொடரில் இதுவரை கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்காக கிறிஸ் கெய்ல் விளையாடியுள்ளார். இந்த முறை ஐபிஎல் ஏலத்தில் கெய்லின் பெயர் இடம்பெறவில்லை.
இதுதொடர்பாக லண்டன் செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில், கடந்த இரண்டு ஆண்டுகளாக ஐபிஎல் நிர்வாகம் தன்னை முறையாக, மரியாதையாக நடத்தவில்லை என உணர்ந்ததாக குறிப்பிட்டுள்ளார். ஐபிஎல்க்கும், கிரிக்கெட்டுக்கும் நிறைய செய்த பிறகும் மரியாதை இல்லை என்பதை உணர்ந்ததாகவும், கிரிக்கெட்டுக்கு பிறகும் தனக்கு வாழ்க்கை உள்ளது என்பதால் இயல்பு நிலைக்கு மாற முயற்சிப்பதாகவும் கிறிஸ் கெய்ல் குறிப்பிட்டுள்ளார்.
அடுத்தாண்டு ஐபிஎல்லில் பங்கேற்பீர்களா? என்ற கேள்விக்கு பதிலளித்த கெய்ல், “நான் கொல்கத்தா, ஆர்சிபி மற்றும் பஞ்சாப் ஆகிய மூன்று அணிகளை பிரதிநிதித்துவப்படுத்தி விளையாடியுள்ளேன். ஆர்சிபி மற்றும் பஞ்சாப் இடையே, அந்த இரண்டு அணிகளில் ஏதாவது ஒன்றில் விளையாடி சாம்பியன் பட்டம் வெல்ல விரும்புகிறேன்.”என்று கூறினார்.
கிறிஸ் கெய்ல் ஐபிஎல் தொடரில் 142 போட்டிகளில் விளையாடி 4,965 ரன்கள் குவித்துள்ளார். இதில் 6 சதங்கள் அடித்துள்ளார். 148.96 ஸ்ட்ரைக் ரேட்டுடன் உள்ள அவரின் சராசரி 39.72 ஆகும். 2013-இல் ஆர்சிபி அணிக்காக புனே வாரியர்ஸுக்கு எதிராக 175* ரன்கள் எடுத்தது இன்றளவும் ஒரு பேட்ஸ்மேனின் அதிகபட்ச T20 ஸ்கோராக உள்ளது.