மில்லரின் 'கில்லர்' பேட்டிங் - ராஜஸ்தானை வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறிய குஜராத்

மில்லரின் 'கில்லர்' பேட்டிங் - ராஜஸ்தானை வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறிய குஜராத்
மில்லரின் 'கில்லர்' பேட்டிங் - ராஜஸ்தானை வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறிய குஜராத்
Published on

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ராஜஸ்தான் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி முதல் அணியாக இறுதிப் போட்டிக்கு
அதிரடியாக நுழைந்துள்ளது குஜராத் டைட்டன்ஸ்.

கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற முதல் தகுதிப் போட்டியில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி, பந்து வீச்சை தேர்வு செய்தது. ராஜஸ்தான் அணியில் அதிரடி ஆட்டக்காரர் ஜோஸ் பட்லருடன் இணைந்து, தொடக்க வீரராக களமிறங்கிய ஜெய்ஷ்வால் 3 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். பின்னர் அந்த அணியின் கேப்டன் சஞ்சு சாம்சனும், பட்லரும் சேர்ந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். அரை சதத்தை நெருங்கிய சாம்சன், 47 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.

தொடக்கத்தில் சற்று நிதானமாக விளையாடிய பட்லர் , இறுதிக்கட்டத்தில் பவுண்டரிகளை விளாசி பட்டையைக் கிளப்பினார். 56 பந்துகளில் 89 ரன்கள் சேர்த்த பட்லர் கடைசி ஓவரில் ரன் அவுட்டானார். 20 ஓவர்களில் ராஜஸ்தான் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 188 ரன்கள் குவித்தது. 

189 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய குஜராத் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. விருதிமான் சாஹா ரன்
கணக்கை தொடங்காமல் பெவிலியன் திரும்பினார்.


அதிரடியாக விளையாடிய சுப்மான் கில் 21 பந்துகளில் 35 ரன்கள் எடுத்து ரன்அவுட்டாகினார். மேத்யூவ் வேட் தன் பங்கிற்கு 35 ரன்கள் எடுத்தார். பின்னர் மத்திய வரிசையில் கேப்டன் ஹர்த்திக் பாண்டியாவும், டேவிட் மில்லரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர்.

மில்லர் 35 பந்துகளில் அரைசதம் அடித்தார். கடைசி ஓவரில் 16 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், முதல் 3 பந்துகளில் ஹாட்ரிக் சிக்ஸர் விளாசி குஜராத் அணியை இறுதிப்போட்டிக்கு அழைத்துச் சென்றார் டேவிட் மில்லர். ஹர்திக் பாண்டியா ஆட்டமிழக்காமல் 27 பந்துகளில் 40 ரன்கள் சேர்த்து வெற்றிக்கு பக்க பலமாக இருந்தார். இந்த வெற்றியன் மூலம் தான் களம் கண்ட முதல் ஐபிஎல் தொடரிலேயே இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று அசத்தியுள்ளது குஜராத் டைட்டன்ஸ்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com