சென்னையில் ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட தந்தை, மகனை காவல்துறையினர் கைது செய்தனர்.
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை மையமாக வைத்து சென்னையில் பல்வேறு இடங்களில் சூதாட்டம் நடப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து காவல் ஆணையர் விஸ்வநாதன் உத்தரவின் பேரில் காவல் துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் சென்னை வண்ணாரப்பேட்டை என்.என் கார்டன் தெருவில் உள்ள டீக்கடையில் வாடிக்கையாளர்களை ஆசை வார்த்தை காட்டி கிரிக்கெட் சூதாட்டம் ஆட அழைப்பது தெரியவந்தது. அங்கு போலீசார் மாறுவேடத்தில் கண்காணித்தபோது, சூதாட்டத்தின் செயல்பாடுகளை போலீசார் கண்டறிந்தனர்.
வாட்ஸ் ஆப் மூலம் கிரிக்கெட் அணிகளின் பெயரில், பணம் வைத்து சூதாட்டம் நடப்பது தெரியவந்தது. போட்டியில் பங்கேற்கும் அணிகள் பெயரில் பணம் கட்டுபவருக்கு, அவர் சொல்லும் அணி வெற்றி பெற்றால் அவர் கட்டும் பணத்துக்கு இரண்டு மடங்கு பணம் அவருக்கு பரிசாக கொடுக்க வேண்டும். இதுதான் சூதாட்டத்தின் விதி. அதாவது சென்னை அணியின் மீது ஒருவர் 4,000 கட்டிவிட்டு அந்த அணி ஜெயித்தால் அவருக்கு 8,000 ரூபாய் கிடைக்கும். இப்படி சொல்லித்தான் கிரிக்கெட் சூதாட்டக்காரர்கள் தங்கள் குழுமத்திற்கு ஆள் சேர்த்துள்ளனர். இதனையடுத்து டீக்கடையில் வைத்து சூதாட்டம் ஆடிய பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த முகமது ஷெரீப், அவரது மகன் சையது அபுதாகிர் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து கிரிக்கெட் சூதாட்டத்துக்கு பயன்படுத்தப்பட்ட ரொக்கம் ரூ.13 ஆயிரத்து 500 மற்றும் செல்போன்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அவர்களுடன் சூதாட்டத்தில் பங்கேற்ற நபர்கள் யார் யார்..? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கைதான தந்தை மகன் இருவரும் ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் ஜெயிலில் அடைக்கப்பட்டனர். சென்னை நகரில் புதிதாக முளைத்துள்ள இந்த கிரிக்கெட் சூதாட்டம் வேறு எங்கெல்லாம் நடக்கிறது என்பது குறித்து போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.