ஐபிஎல் போட்டிகளுக்கு போலீஸார் பாதுகாப்பு தர மறுப்பதால் சென்னையிலிருந்து இடமாற்றம் செய்வதாக ஐபிஎல் தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் பல்வேறு அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக ஐபிஎல் போட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று காலை முதல் இரவு 7 மணி வரை தொடர்ச்சியாக போராட்டங்கள் நடைபெற்றன. நேற்றைய போட்டியின் போது வீரர்களை அழைத்து வருவது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் சிரமங்கள் ஏற்பட்டன. போட்டியின் போது மைதானத்தின் உள்ளே காலணி வீச்சு சம்பவமும் நடைபெற்றது.
இதைத்தொடர்ந்து சென்னையில் நடைபெறும் போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று நிறுத்தப்பட்டது. இந்நிலையில் சென்னையில் இருந்து ஐபிஎல் போட்டிகள் இடம் மாற்றப்படுவதாக ஐபிஎல் தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பேசியுள்ள அவர், “பாதுகாப்பு தர தமிழக போலீஸ் மறுப்பதால் ஐபிஎல் போட்டிகள் சென்னையில் இருந்து மாற்றப்படுகின்றன. புனே உள்ளிட்ட பல இடங்களில் போட்டிகளை நடத்த பரிசீலித்து வருகிறோம். போட்டிகள் நடத்தப்படவுள்ள இடம் இன்னும் முடிவு செய்யப்படவில்லை” என்று கூறினார்.