இந்திய மகளிர் அணிக்கு தவறாக வாழ்த்துச் சொல்லி ஐபிஎல் தலைவர் ராஜீவ் சுக்லா ட்விட்டரில் பதிவிட்டார்.
இந்திய மகளிர் கிரிக்கெட் அணி உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது. இரண்டாவது முறையாக உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்ற இந்திய அணிக்கு பிரபலங்கள் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், இந்திய மகளிர் அணிக்கு வாழ்த்துத் தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்ட ஐபிஎல் தலைவர் ராஜீவ் சுக்லா இந்திய மகளிர் அணி சாம்பியன்ஸ் கோப்பை இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றதற்கு வாழ்த்துவதாக தவறுதலாகக் குறிப்பிட்டிருந்தார்.
ஆனால், அடுத்த சில நிமிடங்களில் தனது தவறை உணர்ந்த ராஜீவ் சுக்லா, தவறான பதிவை நீக்கிவிட்டு உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்ற இந்திய அணிக்கும், 171 ரன்கள் குவித்த ஹர்மன்ப்ரீத் கவுருக்கும் வாழ்த்துகள் எனத் தெரிவித்துள்ளார். இருப்பினும், ராஜீவ் சுக்லாவின் முந்தைய பதிவைக் குறிப்பிட்டு பிசிசிஐ-யில் முக்கியமான பொறுப்பில் இருக்கும் ஒருவருக்கு உலகக் கோப்பை தொடருக்கும், சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்குமான வித்தியாசம் கூட தெரியவில்லையா என்று கூறி நெட்டிசன்கள் கலாய்த்தனர்.