6 மாதங்களுக்கு முன்பே தயாராகும் மும்பை, பஞ்சாப் அணிகள் - புதிய பயிற்சியாளர்கள் நியமனம்

6 மாதங்களுக்கு முன்பே தயாராகும் மும்பை, பஞ்சாப் அணிகள் - புதிய பயிற்சியாளர்கள் நியமனம்
6 மாதங்களுக்கு முன்பே தயாராகும் மும்பை, பஞ்சாப் அணிகள் - புதிய பயிற்சியாளர்கள் நியமனம்
Published on

2023-ம் ஆண்டுக்கான 16-வது சீசன் ஐபிஎல் போட்டியை முன்னிட்டு மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் புதிய தலைமைப் பயிற்சியாளர்களை நியமித்துள்ளன.

கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக முழுமையாக இந்திய கிரிக்கெட் மைதானங்களில் நடைபெறாமல் இருந்த ஐபிஎல் போட்டிகள், இந்த வருடம் மும்பை மற்றும் புனேவில் 15-வது சீசனுக்கான லீக் போட்டிகளும், கொல்கத்தாவில் குவாலிஃபயர் மற்றும் எலிமினேட்டர் போட்டிகளும், குவாலிஃபயர் 2 மற்றும் இறுதிப் போட்டிகள் அகமதாபாத்திலும், மார்ச் மாதம் முதல் மே மாதம் வரை நடைபெற்றன. இந்த ஐபிஎல் தொடரில் புதிதாக குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் அறிமுகப்படுத்தப்பட்டன.

மொத்தம் 10 அணிகள் விளையாடிய இந்தத் தொடரில், 4 முறை கோப்பை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், 5 முறை சாம்பியன் பட்டம் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியும் மிகவும் மோசமான பார்மில் இருந்தன. மொத்தம் 14 போட்டிகளில் 4-ல் மட்டுமே வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலில் கடைசி இரண்டு இடங்களை இடம் பிடித்தது ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்தது. 16-வது சீசன் ஐபிஎல் தொடர் துவங்க இன்னும் 6 மாதங்களே உள்ளநிலையில், தற்போதே அணியை வலுப்படுத்தும் வகையில், 15 சீசன்களாக கோப்பையை வெல்லாத பஞ்சாப் கிங்ஸ் அணியும், அதிக முறை சாம்பியன் பட்டம் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியும் புதிய தலைமை பயிற்சியாளரை நியமித்துள்ளன.

அந்தவகையில், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு தலைமைப் பயிற்சியாளராக தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த முன்னாள் விக்கெட் கீப்பரான மார்க் வெர்டன் பௌச்சர் நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது, தென் ஆப்ரிக்காவின் தலைமை பயிற்சியாளராக உள்ள மார்க் பௌச்சர், அடுத்த மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள டி20 உலகக் கோப்பை தொடரில் தென் ஆப்ரிக்ககாவை வழி நடத்துகிறார். அதன்பிறகு பதவி விலகும் அவர், மும்பை இந்தியன்ஸ் அணியில் சேர உள்ளார். உலகின் தலைச்சிறந்த விக்கெட் கீப்பர்களில் ஒருவராக அறியப்படும் மார்க் பௌச்சர், மும்பை இந்தியன்ஸ் அணியில் பணியாற்ற உள்ளது மரியாதைக்குரிய விஷயமாக கருதுவதாக தெரிவித்துள்ளார்.

இதேபோல், ஐபிஎல் தொடர் துவங்கி இதுவரை 15 சீசன் கடந்துள்ளநிலையில் ஒருமுறைக் கூட கோப்பை வெல்லாத பஞ்சாப் கிங்ஸ் அணி, இந்த முறை கோப்பை வெல்லும் முனைப்பில், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த முன்னாள் முதல்தர கிரிக்கெட் வீரரான ட்ரீவர் பேலிஸ்ஸை தலைமைப் பயிற்சியாளராக நியமித்துள்ளது. நியூ சவுத் வேல்ஸ், இலங்கை, சிட்னி சிக்ஸர்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், இங்கிலாந்து, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் உள்ளிட்ட அணிகளுக்கு தலைமைப் பயிற்சியாளராக இருந்துள்ளார் ட்ரீவர் பேலீஸ். இவரது பயிற்சியின் கீழ், இங்கிலாந்து அணி கடந்த 2019-ம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பையும், ஐபிஎல் தொடரில் 2012 மற்றும் 2014-ம் ஆண்டு கொல்கத்தா அணி சாம்பியன் பட்டத்தையும், பிக்பேஸ் ( CLT20) கிரிக்கெட் தொடரில் சிட்னி சிக்ஸர்ஸ் அணி சாம்பியன் பட்டத்தையும் வெற்றிபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com