மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னாள் கேப்டனும், மும்பை அணியின் ஆல் ரவுண்டருமான கீரன் பொல்லார்டு ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வுப் பெறுவதாக அறிவித்துள்ளார். இதனையடுத்து, மும்பை இந்தியன்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக பொல்லார்டை அந்த அணி நியமித்துள்ளது.
மேற்கிந்திய தீவுகள் அணியின் அதிரடி பேட்ஸ்மேனான கீரன் பொல்லார்டு, டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு எதிராக கடந்த 2010-ம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியின்போது, மும்பை இந்தியன்ஸ் அணிக்காக முதன் முதலில் களமிறங்கினார். அப்போது அவரை அதிக விலை கொடுத்து எடுத்திருந்தது மும்பை இந்தியன்ஸ் அணி. அதனை நிரூப்பிக்கும் விதமாக அறிமுகமான 3-வது சீசனில் சிறப்பாக விளையாடி வந்த பொல்லார்டு, ஒரு போட்டியில் 13 பந்துகளில் 45 ரன்கள் (6 சிக்ஸர்களுடன்) எடுத்து தனது அதிரடியை காட்டினார். அத்துடன் அந்தப் போட்டியில் 2 ரன் அவுட்களை வீழ்த்தி ஆட்ட நாயகன் விருதையும் வென்றார்.
மேலும் அரையிறுதிப் போட்டியில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருக்கு எதிராக 13 பந்துகளில் 33 ரன்கள் (3 சிக்ஸர்கள்) எடுத்து அவுட்டாகாமால் இறுதிவரை களத்தில் நின்றார் பொல்லார்டு. அந்தப் போட்டியில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியதுடன் ஒரு ரன் அவுட்டும் எடுத்திருந்தார் அவர். இதனால் சச்சின் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி முதன்முதலாக இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் மோதியது. எனினும் அந்த சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
இதன்பிறகு, 2011 மற்றும் 2012 ஐபிஎல் தொடரிலும் சாதித்த கீரன் பொல்லார்டு, குறிப்பாக 2012-ல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக 33 பந்துகளில் 64 ரன்கள் எடுத்ததுடன், 44 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளையும் சாய்த்திருந்தார். இதனைத் தொடர்ந்து 2013-ம் ஆண்டு ஐபிஎல் போட்டியில் சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் தோனி அடித்த பந்தை கேட்ச் பிடித்ததுடன் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தியிருந்தார் பொல்லார்டு.
அத்துடன் 38 பந்துகளில் அவுட்டாகமல் 57 ரன்கள் எடுத்தார். அந்த தொடர் முழுவதுமே அதிரடியாக விளையாடிய பொல்லார்டு, சென்னை அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் ஒரு விக்கெட்டை வீழ்த்தியதுடன் 32 பந்துகளில் 60 ரன்கள் எடுத்து, மும்பை இந்தியன்ஸ் அணி முதல் ஐபிஎல் கோப்பை வெல்ல காரணமாக இருந்தார். மேலும் இந்தத் தொடரில் தான் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக தொடர்ச்சியாக 7 பந்துகளில் 6 சிக்ஸர்களை அடித்தும் சாதனை புரிந்தார் பொல்லார்டு.
இதனைத் தொடர்ந்து 2014 மற்றும் 2015 ஐபிஎல் தொடரிலும், அதிரடியை வெளிப்படுத்திய கீரன் பொல்லார்டு, மும்பை இந்தியன்ஸ் அணி 2015-ம் ஆண்டு 2-வது ஐபிஎல் கோப்பையை வெல்லக் காரணமாக இருந்தார். 2017, 2019, 2020 என மும்பை இந்தியன்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்ற நேரங்களில் எல்லாம், இக்கட்டான தருணங்களில் களமிறங்கி ஆல் ரவுண்டராக சாதித்த கீரன் பொல்லார்டு, கடந்த 2019-ம் ஆண்டு முதலே ஒரு சிலப் போட்டிகளில் தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த தவறியும் வந்தார்.
35 வயதான கீரன் பொல்லார்டு கடந்த ஏப்ரல் மாதம் அனைத்துவிதமான சர்வதேச போட்டிகளிலும் ஓய்வை அறிவித்த நிலையில், இன்று ஐபிஎல் போட்டிகளில் இருந்தும் உருக்கமான பதிவுடன் ஓய்வை அறிவித்துள்ளார். இன்றுடன் 2023-ம் ஆண்டுக்கான 16-வது சீசன் ஐபிஎல் தொடருக்கான தக்கவைக்கப்பட்ட மற்றும் விடுவிக்கப்பட்ட வீரர்கள் குறித்த பட்டியலை 10 அணிகளும் சமர்பிக்க வேண்டும் என்று பிசிசிஐ அறிவுறுத்தியநிலையில், மும்பை இந்தியன்ஸ் அணியிலிந்து கீரன் பொல்லார்டு விடுவிக்கப்பட்டார்.
இதனால் வேறு அணியில் விளையாட விரும்பவில்லை என்றும், எப்போதும் மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாடவே விருப்பம் எனவும், ஒரு முறை மும்பை இந்தியன்ஸ் அணிக்காரன் என்றால் எப்போதுமே மும்பை இந்தியன்ஸ் அணிக்காரன் தான் எனவும் தெரிவித்து, தனது ஓய்வை அறிவித்துள்ளார் கீரன் பொல்லார்டு. இதனைத் தொடர்ந்து ட்விட்டர் புரொபைல் பிக்சரை கீரன் பொல்லார்டு இருக்கும்வகையில் மாற்றிய மும்பை இந்தியன்ஸ் அணி, அவரை அந்த அணியின் பேட்டிங் பயிற்சியாளராக நியமித்து இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது.
கடந்த 2010-ம் ஆண்டு மும்பை அணிக்காக அறிமுகமாகி, அந்த அணிக்காக 13 வருடங்கள் விளையாடியுள்ள கீரன் பொல்லார்டு, இதுவரை 189 போட்டிகளில் 3412 ரன்களை குவித்துள்ளார். அதுமட்டுமின்றி பந்துவீச்சிலும் கை கொடுத்த அவர் 63 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தியுள்ளார்.