பெங்களூரு அணியா இது! அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்.. ’ஷாக்’ கொடுத்த ஹைதராபாத் பவுலர்கள்

பெங்களூரு அணியா இது! அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்.. ’ஷாக்’ கொடுத்த ஹைதராபாத் பவுலர்கள்
பெங்களூரு அணியா இது! அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்.. ’ஷாக்’ கொடுத்த ஹைதராபாத் பவுலர்கள்
Published on

நடப்பு ஐபிஎல் சீசனில் இதுவரை விளையாடியுள்ள 7 போட்டிகளில் ஐந்தில் வெற்றி பெற்று புள்ளிப் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது பெங்களூரு அணி. ஒவ்வொரு ஐபிஎல் தொடரிலும் சொதப்பி கோப்பையை தவறவிட்டு வரும் நிலையில், இந்த முறையாவது கோப்பையை வெல்லும் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறார்கள் ஆர்சிபி ரசிகர்கள். ஆனால், அந்த நம்பிக்கையில் பெரிய பாறாங்கல் விழுந்துள்ளது. இடியே விழுந்துள்ளது என்று கூட சொல்லலாம்.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் பெங்களூரு அணி வெறும் 68 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து அதிர்ச்சி அளித்துள்ளது. என்னது 68 ரன்களில் ஆல் அவுட்டா?. அதுவும் டூப் ப்ளசிஸ், விராட் கோலி, மேக்ஸ்வெல், தினேஷ் கார்த்திக் என இவ்வளவு பேட்ஸ்மேன்கள் இருந்தும் இந்த நிலையா என்றுதான் ரசிகர்கள் ஆச்சர்யம் நீங்காமல் இருக்கிறார்கள்.

பெங்களூர் அணியின் இந்த சரிவுக்கு காரணம் ஹைதராபாத் அணியின் மேக்ரோ ஜான்சென் தான். ஆம், அவர் வீசிய ஆட்டத்தின் இரண்டாவது ஓவரில் மூன்று விக்கெட்டுகளை சாய்த்துவிட்டார். டூப் ப்ளசிஸ் 5, விராட் கோலி 0, அனுஜ் ராவத் 0 ரன்களில் நடையை கட்டினர். இந்த ஓவரில் ஏற்பட்ட சரிவு அதன் பிறகும் தொடர்ந்தது. எப்படியாவது மேக்ஸ்வெல், தினேஷ் கார்த்திக் இந்த சரிவை தடுத்துவிடுவார்கள் என்று நினைத்தால், எதுவும் நடக்கவில்லை. மேக்ஸ்வெல் விக்கெட்டை தூக்கினார் தமிழக வீரர் நடராஜன். ஹைதராபாத் வீரர் சுசித் வீசிய ஆட்டத்தின் 9வது ஓவரில் தினேஷ் கார்த்திக் 0, பிரபு தேசாய் 15 ரன்களில் இருவரும் ஆட்டமிழந்தனர்.

16.1 ஓவர்களில் பெங்களூரு அணி 68 ரன்களில் ஆட்டமிழந்தது. ஹைதராபாத் அணியில் மேக்ரோ ஜான்சன் 4 ஓவர்களில் 25 ரன்கள் விட்டுக் கொடுத்து 3 விக்கெட் சாய்த்தார். நடராஜன் 3 ஓவர்கள் வீசி 10 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளையும் சாய்த்தார். சுசித் 3 ஓவர்களில் 12 ரன்கள் விட்டுக்கொடுத்து இரண்டு விக்கெட் சாய்த்தார்.

69 ரன்கள் என்ற இலக்குடன் விளையாடிய ஹைதராபாத் அணியில் தொடக்கவீரர்களாக அபிஷேக் சர்மா, வில்லியம்சன் களமிறங்கினர். வில்லியம்சனை எதிர் முனையில் நிற்கவைத்து அதிரடி காட்டினார் அபிஷேக் சர்மா. பவுண்டரிகளாக விளாசினார். அபிஷேக் சர்மா 28 பந்துகளில் 47 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 8 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 72 ரன்கள் எடுத்து ஹைதராபாத் அணி அசத்தலாக வெற்றி வாகை சூடியது. 

பெங்களூர் அணிக்கு இது மூன்றாவது தோல்வி. அதுவும் மோசமான தோல்வி. ஹைதாராப் அணிக்கு இது 5வது வெற்றி. அதுவும் மிரட்டலான வெற்றி. புள்ளிப் படத்தில் இரண்டாவது இடத்தில் அந்த அணி தொடர்கிறது. பெங்களூரு அணி ஒரு இடம் கீழே இறங்கி நான்காவது இடத்திற்கு வந்துள்ளது. மூன்றாவது இடத்தில் ராஜஸ்தான் அணி உள்ளது. நடப்பு ஐபிஎல் சீசனில் அடிக்கப்பட்ட குறைவான ஸ்கோர் இன்று பெங்களூர் அணி அடித்ததுதான். 

வழக்கத்திற்கு மாறாக இன்று 90 நிமிடங்களுக்கு முன்பாக போட்டி முடிந்துவிட்டது. முதல் இன்னிங்சில் 16.1 ஒவர்களும்., இரண்டாவது இன்னிங்சில் 8 ஓவர்களும் வீசப்பட்டது. இரண்டாவது இன்னிங்சில் 72 பந்துகள் மீதம் இருந்தது. மொத்தமாக, 95 பந்துகள் வீசப்படவில்லை.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com