டெல்லி அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் குறிப்பிட்ட நேரத்திற்குள் பந்துவீச்சை முடிக்காத காரணத்தால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனிக்கு 12 இலட்ச ரூபாய் அபதாரம் விதிக்கப்பட்டிருக்கிறது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனிக்கு, நடைபெற்று வரும் 14 வது ஐபிஎல்லின் தொடக்கப்போட்டியிலேயே ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. இந்த ஐபிஎல்லின் முதல்போட்டியிலேயே சிஎஸ்கே அணி டெல்லி அணியிடம் படுதோல்வியடைந்தது. இப்போது இரண்டாவது அதிர்ச்சியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மெதுவாக பந்துவீசியதாக குற்றம்சாட்டப்பட்டு, ஐபிஎல் நிர்வாகம் தோனிக்கு 12 லட்சம் ரூபாய் அபராதம் விதித்திருக்கிறது.
நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் டெல்லி அணியுடன் நடந்த போட்டியின் போது, குறிப்பிட்ட நேரத்துக்குள் பந்துவீச்சை முடிக்காத காரணத்தால் சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் மகேந்திரசிங் தோனிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இந்த சீசனில் தோனிக்கு இது முதல் குற்றமாகும். இதனால் அவருக்கு அபராதம் மட்டும் விதிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இன்னும் இரண்டு போட்டிகளில் இதுபோல தவறு செய்தால் அவர் ஒரு போட்டி அல்லது இரண்டு போட்டிகளுக்கு இடைநீக்கம் செய்யப்பட வாய்ப்புள்ளது.
புதிய கடுமையான ஐபிஎல் விதிகளின்படி, ஒவ்வொரு அணியும் தனது ஐபிஎல் இன்னிங்ஸை 90 நிமிடங்களில் முடிக்க வேண்டும். ஒரு ஐபிஎல் போட்டியின் மொத்த விளையாட்டு நேரம் இரண்டரை மணி நேரம் ஆகும். விதிப்படி, ஒரு மணி நேரத்துக்கு 14.1 ஓவர்கள் வீசப்பட வேண்டும்.
ஐபிஎல் போட்டிகளின் போது முதன்முறை தவறுக்கு 12 இலட்சம் அபதாரம் விதிக்கப்படும். இரண்டாவது குற்றத்திற்கு கேப்டனுக்கு 24 லட்சம் அபராதமும், மீதமுள்ள அணி உறுப்பினர்களுக்கு 6 லட்சம் ரூபாய் அல்லது 25% போட்டி கட்டணம் அபராதமாக (எது குறைவானதோ அது) விதிக்கப்படும். மூன்றாவது குற்றத்திற்கு கேப்டனுக்கு 30 லட்சம் ரூபாய் அபராதமும், ஒரு போட்டிக்கு தடையும் விதிக்கப்படும், அணியின் மற்ற வீரர்களுக்கு 12 லட்சம் அல்லது 50% போட்டிக் கட்டணம் அபராதமாக (எது குறைவானது) விதிக்கப்படும்.