டி20 போட்டி என்றாலே பரபரப்புக்கு துளிகூட பஞ்சம் இருக்காது. அதற்கு சிறந்த உதாரணமாக அமைந்தது டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி மோதி விளையாடிய லீக் மேட்ச்.
ஆரம்பம் முதல் இறுதி வரை விறுவிறுப்பு தான்.
*’பேட்டிங்கிற்கு சாதகமான துபாய் பிட்சில் சேஸிங் செய்கின்ற அணி தான் வெல்லும்’ என பிட்ச் ரிப்போர்ட்டிலேயே கொளுத்தி போட்டிருந்தார் கெவின் பீட்டர்சன். அவர் சொன்னபடியே டாஸ் வென்றதும் பவுலிங்கை தேர்வு செய்தார் பஞ்சாப் கேப்டன் ராகுல்.
*வலுவான பேட்டிங் லைன் அப் கொண்ட டெல்லி அணிக்கு தொடக்கமே சறுக்கலாக தான் அமைந்தது. தவான், பிருத்வி ஷா, ஹெட்மயர் வந்த வேகத்தில் பெவிலியன் திரும்ப கேப்டன் ஷ்ரேயஸும், பண்டும் பொறுப்பாக விளையாடினர்.
*இருந்தும் மேட்ச் முழுவதும் பஞ்சாப்பின் கண்ட்ரோலில் இருக்க டெல்லியின் பக்கமாக தனது ஆட்டத்தின் மூலம் திருப்பினார் ஸ்டாய்னிஸ். அரை சதம் கடந்து டெல்லி அணியின் மானம் காத்து பஞ்சாப் வெற்றி பெற 158 ரன்களை இலக்காக நிர்ணயித்தார்.
*பஞ்சாப் அணிக்காக ஷமியும், ரவி பிஷோனியம் பவுலிங்கில் எக்கானமியாக பந்து வீசியிருந்தனர்.
*ஐபிஎல் வரலாற்றிலேயே டிண்டாவுக்கு இணையாக ஒரே ஓவரில் 30 ரன்களை வள்ளல் போல கடைசி ஓவரில் கொடுத்திருந்தார் பஞ்சாப் அணியின் ஜார்டன்.
*சுலபமான டார்கெட்டை சேஸ் செய்த பஞ்சாப் அணி முதல் சில ஓவர்களில் அதிரடி காட்டியிருந்தாலும் டெல்லியின் பந்து வீச்சில் பத்து ஓவர்களில் 55 ரன்கள் மட்டுமே எடுத்து 5 விக்கெட்டுகளை இழந்திருந்தது.
*பவர்பிளேயின் கடைசி ஓவரில் பந்து வீசிய டெல்லி அணியின் அஷ்வின் ஒரே ஓவரில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். அந்த ஓவரின் கடைசி பந்தை வீசிய அஷ்வின் பந்தை தடுக்க முயன்ற போது காயம்பட்டு பெவிலியன் திரும்பினார்.
*டெல்லி அணிக்காக ஸ்டாய்னிஸ் செய்ததை பஞ்சாப்புக்காக செய்தார் மயங்க் அகர்வால். டாப் 5 பேட்ஸ்மேன்கள் அவுட்டான போதும் கடைசி வரை விளையாடிய அவர் 60 பந்துகளில் 89 ரன்களை குவித்து டெல்லிக்கு பிரெஷர் கொடுத்தார்.
*ரபாடா வீசிய பதினெட்டாவது ஓவரில் மயங்க் கொடுத்த கேட்ச் வாய்ப்பை ஷ்ரேயஸ் ஐயர் வீணடித்தார்.
*கடைசியில் மேட்ச் சமனில் முடிய இரு அணியும் சூப்பர் ஓவரில் விளையாடின. ரபாடாவின் வேகத்தில் வெறும் இரண்டு ரன்களை மட்டுமே பஞ்சாப் எடுக்க அதை சுலபமாக கடந்து வென்றது டெல்லி.