ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டியின் 13 ஆவது சீசன் அடுத்த ஆண்டு தொடங்குகிறது. இந்நிலையில் அடுத்த ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் வீரர்களின் ஏலம் தொடங்கியுள்ளது. இதனையடுத்து எந்ததெந்த அணிக்கு எவ்வளவு ரூபாய் இப்போது கைவசம் இருக்கிறது, எத்தனை வீரர்களை தங்களது அணியில் சேர்க்கலாம் என்ற விவரங்களை தெரிந்துக்கொள்ளலாம்.
இந்த ஐபிஎல் ஏலத்தில் மொத்தம் 146 வெளிநாட்டு வீரா்கள் உள்பட 332 வீரா்கள் ஏலப் பட்டியலில் இடம்பெற்றுள்ளனா். 73 வீரா்களை 8 அணிகள் தோ்வு செய்யவுள்ளன. ஆஸ்திரேலியாவின் பட் கம்மின்ஸ், ஜோஷ் ஹேஸில்வுட், கிறிஸ் லின், மிச்செல் மார்ஷ், கிலென் மாக்ஸ்வெல் ஆகியோரும், தென்னாப்பிரிக்காவின் டேல் ஸ்டெயின், இலங்கை வீரா் ஏஞ்ஜெலோ மேத்யூஸ் ஆகியோரின் அதிகபட்ச அடிப்படை ஏலத் தொகை ரூ.2 கோடியாகும்.
ஏற்கெனவே வீரா்களை தக்க வைத்துக் கொண்டுள்ள அணிகள் எஞ்சியுள்ள இடங்களுக்கு வீரா்களைத் தோ்வு செய்யவுள்ளன. அதன்படி, சென்னை சூப்பா் கிங்ஸ் வசம் வீரா்களைத் தோ்வு செய்வதற்கு ரூ.14.60 கோடியும், தில்லி கேப்பிடல்ஸ் வசம் ரூ.27.85 கோடியும் உள்ளது. கிங்ஸ் லெவன் பஞ்சாப் ரூ.42.70 கோடி, கொல்கத்தா நைட் ரைடா்ஸ் ரூ.35.65 கோடி, மும்பை இந்தியன்ஸ் ரூ.13.05 கோடி, ராஜஸ்தான் ராயல்ஸ் ரூ.28.90 கோடி, பெங்களூரு ராயல் சேலஞ்சா்ஸ் ரூ.27.90 கோடி, சன்ரைசா்ஸ் ஹைதராபாத் வசம் ரூ.17 கோடியும் உள்ளது.