‘ஆடியன்ஸ்’ இல்லாத ஐபிஎல் போட்டிகள் : கொரோனாவால் வேறுவழியில்லை..!

‘ஆடியன்ஸ்’ இல்லாத ஐபிஎல் போட்டிகள் : கொரோனாவால் வேறுவழியில்லை..!
‘ஆடியன்ஸ்’ இல்லாத ஐபிஎல் போட்டிகள் : கொரோனாவால் வேறுவழியில்லை..!
Published on

மைதானத்தில் ரசிகர்கள் இன்றி ஐபிஎல் போட்டிகளை நடத்த ஆலோசனைகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஐபிஎல் போட்டிகள் வரும் மார்ச் 29ஆம் தேதி தொடங்குகின்றன. இதனை எதிர்பார்த்து இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். அத்துடன் ஐபிஎல் டிக்கெட்டுகளை எப்படியாவது வாங்கி நேரில் சென்று தங்களுக்கு பிடித்த கிரிக்கெட் வீரர்களை பார்த்துவிட வேண்டும் என்றும் ஆசையில் இருக்கின்றனர். இதனால் ஆண்டுதோறும் ஐபிஎல் டிக்கெட்டுகளை வாங்குவதற்கு மைதானத்தின் கவுன்ட்டர்கள் முன்பு ரசிகர்கள் இரவு முதலே கூடி விடுவது வழக்கமாக இருக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக கூட சென்னை உட்பட பல்வேறு நகரங்களில் ஐபிஎல் டிக்கெட்டுகள் பிளாக்கில் விற்கப்பட்ட சம்பவங்களும், அதற்கு எதிரான நடவடிக்கைகளும் நடந்தன.

இந்த அளவிற்கு ஐபிஎல் போட்டியை நேரில் காண வேண்டுமென ஆர்வமுடன் மக்கள் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். அவர்களின் இந்த ஆசைக்கு எதிராக பெரும் பூதம் போல் வந்துவிட்டது கொரோனா வைரஸ் எனும் கொடூரன். உலக அளவில் லட்சக்கணக்கானோரை பாதித்துள்ள இந்த கொடிய வைரஸ், ஆயிரக்கணக்கானோரின் உயிரை பறித்துள்ளது. இந்தியாவிலும் இந்த வைரஸ் பரவி 70க்கும் மேற்பட்டோரை பாதித்துள்ளது. இதனால் கொரோனா வைரஸ் இந்திய மக்களிடையே பரவிடக் கூடாது என்பதில் மத்திய, மாநில அரசுகள் முழு விழிப்புடன் இருக்கின்றன. குறிப்பாக மத்திய சுகாதாரத்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அதில் ஒன்று தான் இருமல் காலர் ட்யூன். ஆனால் இந்தத் திட்டத்தில் சில விமர்சனங்கள் இருப்பது தனிக்கதை.

இந்த அளவிற்கு இந்திய அரசு விழிப்புடன் இருப்பதற்கு காரணம் சீனா, அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட வளர்ந்த நாடுகளையே கொரோனா கடுமையாக பாதித்து இருப்பதுதான். அதுமட்டுமின்றி உலக சுகாதார அமைப்பு கொரோனா வைரஸ் ஒரு கொடிய தொற்று நோய் என அறிவித்திருப்பதும் தான். எனவே மக்கள் அதிகம் கூடுவதை அனைத்து நாடுகளும் தவிர்த்துவிடுங்கள் எனவும் உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தியுள்ளது. அவ்வாறு மக்கள் அதிக அளவில் கூடினால் கொரோனா வேகமாக பரவ அது வழிவகை செய்துவிடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுவாகவே கிரிக்கெட் போட்டிகள் என்றால் இந்தியாவில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மைதானத்தில் குவிந்துவிடுவார்கள். அதிலும் ஐபிஎல் என்றால் ஒரு டிக்கெட் கூட பாக்கி இல்லாமல் விற்றுவிடும் எனவே கட்டாயம் பல்லாயிரம் பேர் அங்கு திரண்டுவிடுவார்கள். இதுவே தற்போது ஐபிஎல் போட்டிகளுக்கு எதிராக வந்து நிற்கிறது. ஏற்கனவே உலகின் பல்வேறு நாடுகள் தாங்கள் நடத்தவிருந்த விளையாட்டு நிகழ்ச்சிகள், பிரம்மாண்ட நிகழ்ச்சிகள், பொதுக்கூட்டங்கள் உள்ளிட்டவற்றை தவிர்த்துவிட்டன.

இந்நிலையில் இந்தியாவில் ஆயிரக்கணக்கானோர் கூடும் ஐபிஎல் போட்டியை நடத்தினால் அது சர்வேதச அளவில் எதிர்க்குரல்களை எழுப்பலாம். அதுமட்டுமின்றி இந்திய சுகாதாரத்துறையே மக்கள் நலன் தான் முக்கியம், போட்டிகள் எல்லாம் பின்னர் தான் என அறிவித்திருப்பதால் அரசே இதனை அனுமதிக்காது என்பதும் தெரிகிறது. இருப்பினும் விளையாட்டை நிறுத்தமாட்டோம் மக்கள் கூடுவதை தான் நிறுத்துவோம் என மத்திய விளையாட்டுத்துறை இணையமைச்சர் கிரேண் ரிஜிஜு தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது பேச்சின்படி, பார்த்தால் ஐபிஎல் போட்டிகள் நடைபெறும் ஆனால் ரசிகர்கள் கூட மாட்டார்கள் என்றே தெரிகிறது.

இந்தப் பிரச்னை ஒருபுறம் என்றால், மற்றொருபுறம் ஐபிஎல் போட்டிகளில் விளையாடும் வெளிநாட்டு வீரர்களுக்கு விசா கொடுப்பதில் பிரச்னை இருக்கிறது. ஏனென்றால் கொரோனா பாதிப்பு நாடுகளில் இருந்து பல வீரர்கள் ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்க வரவுள்ளனர். அவர்களை அனுமதிப்பதிலும் சிக்கல் ஏற்படலாம். தற்போது நடக்கும் இந்தியா - தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் போட்டியே பல்வேறு ஆலோசனைகள், நிபந்தனைகளுடன் நடத்தப்பட்டுக்கொண்டிருக்கிறது.

அத்துடன், பல்வேறு மருத்துவ பரிசோதனைகளும் செய்யப்பட்டுள்ளன. இப்படி இருக்க பல நாடுகளை சேர்ந்த வீரர்கள் வரும் போது கூடுதல் கெடுபிடி இருக்கலாம் அல்லது வெளிநாட்டு வீரர்கள் இன்றிகூட ஐபிஎல் நடக்கலாம் எனப்படுகிறது. இதற்கெல்லாம் விடைதேடும் வகையில் நாளை மறுநாள் (மார்ச் 14) ஐபிஎல் நிர்வாகக்குழுக் கூட்டம் நடைபெறவுள்ளது. அதில் பல்வேறு ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு, ஐபிஎல் தொடர்பான பல அதிகாரப்பூர்வ அறிவிப்புகளும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com