ஐபிஎல் 2020 : சிறந்த 10 பவுலர்கள் ஒரு பார்வை..!

ஐபிஎல் 2020 : சிறந்த 10 பவுலர்கள் ஒரு பார்வை..!
ஐபிஎல் 2020 : சிறந்த 10 பவுலர்கள் ஒரு பார்வை..!
Published on

ஐபிஎல் போட்டிகளை பொறுத்தவரையில் 20 ஓவர்கள் கொண்ட தொடர் என்பதால் பேட்டிங்கில் அனைத்து வீரர்களும் அதிரடியை வெளிப்படுத்துவார்கள். குறிப்பாக சர்வதேச பேட்ஸ்மேன்கள் அடித்தால் சிக்ஸர், இல்லையென்றால் அவுட் என்ற பாணியில் பயமின்றி அடிப்பார்கள். இதனால் அவர்களது பேட்டிங்கை கட்டுப்படுத்துவது மிகக் கடினம். அதேசமயம் உள்ளூர் வீரர்கள் தங்களின் திறமையை நிரூபித்துவிட வேண்டும் என்ற நினைப்பிலும், அனைவரது கவனத்தையும் ஈர்த்துவிட வேண்டும் என்ற எண்ணத்திலும் பேட்டிங் செய்வார்கள். இந்த இரண்டு ரகத்தையும் தவிர்த்து எப்போதுமே அதிரடி பேட்டிங்கை மட்டுமே செய்யும் பேட்ஸ்மேன்களும் உண்டு. அவர்களின் ருத்ர தாண்டவம் அனைத்து பந்துகளை பவுண்டரிகளுக்கு அப்பால் கொண்டு சென்றுவிடும்.

இதையெல்லாம் கட்டுப்படுத்த வேண்டுமென்றால் ஒரு அணிக்கு சிறந்த பவுலிங் தேவை. ஐபிஎல் போட்டிகளில் பேட்டிங் எந்த அளவிற்கு முக்கியமோ அதைவிட பவுலிங் முக்கியம். கடந்த ஆண்டு மும்பை அணி கோப்பையை வென்றதற்கு முக்கிய காரணம் அந்த அணியின் பவுலிங் தான். இறுதிப்போட்டியில் சென்னை அணிக்கு எதிராக மும்பை அணி 149 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. ஆனால் அவர்களின் திறமையான பவுலர்கள் போட்டியை வெற்றி பெற வைத்து, கோப்பையையும் பெற்றுக்கொடுத்தனர். இது மட்டுமின்றி கடந்த முறை நடந்த ஐபிஎல் தொடரின் பல போட்டிகளின்போது சிறந்த பவுலிங்தான் ஆட்டத்தின் திசையையே மாற்றியது.

இதனால் தான் 2020ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் ஏலத்தில் பவுலர்களே அதிக தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டனர். அதிகபட்சமாக ஆஸ்திரேலிய பவுலர் பட் கம்மின்ஸ் ரூ.15.5 கோடிக்கு வாங்கப்பட்டார். அத்துடன் வெஸ்ட் இண்டீஸ் பவுலர் காட்ரல் ரூ.8.5 கோடி, ஆஸ்திரேலிய பவுலர் நாதன் கட்லர் நைல் ரூ.8 கோடி, இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் பியூஷ் சாவ்லா ரூ.6.75 கோடி, இங்கிலாந்து பவுலர் சாம் குரான் ரூ.5.5 கோடிக்கு வாங்கப்பட்டனர். இதுதவிர தென்னாப்பிரிக்க பவுலிங் ஆல்ரவுண்டர் கிரிஸ் மோரிஸ் ரூ.10 கோடிக்கு வாங்கப்பட்டார். இந்த ஏலமே ஐபிஎல் போட்டியில் பவுலர்களின் முக்கியத்துவம் என்ன என்பதை அனைவருக்கும் உணர்த்தியது.

ஐபிஎல் போட்டிகள் இந்த மாதம் 29ஆம் தேதி நடைபெறவிருந்த நிலையில், கொரோனா வைரஸ் பாதிப்பின் எதிரொலியாக ஏப்ரல் 15ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் ஐபிஎல் போட்டிகளில் இந்த முறை சிறப்பாக பந்துவீசவுள்ள 10 வீரர்கள் குறித்து கிரிக்கெட் வல்லுநர்கள் கூறியதை காண்போம்.

இம்ரான் தஹிர்

தென்னாப்பிரிக்க அணியின் சுழற்பந்து வீச்சாளரான இவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடுகிறார். பந்தை தொட்டாலே விக்கெட்டை கைப்பற்றும் இவரை சென்னை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் செல்லமாக ‘பராசக்தி எக்ஸ்பிரஸ்’ என அழைக்கின்றனர். ஏனென்றால் ஒரு விக்கெட்டை கைப்பற்றும் இவர், சுமார் ஒரு கிலோ மீட்டர் ஓடுவார் என ரசிகர்கள் கூறுகின்றனர்.

காசிகோ ரபாடா

இவரும் தென்னாப்பிரிக்க அணியை சேர்ந்தவர் தான். ஆனால் வேகப்பந்து வீச்சாளர். தற்போது டெல்லி அணிக்காக விளையாடுகிறார். இவர் வீசும் யார்க்கர் பந்தில் சற்று கவனம் தவறினாலும் ஸ்டெம்ப் உடைந்துவிடும்.

முஜிபுர் ரஹ்மான்

ஆப்கானிஸ்தான் அணியை சேர்ந்த ரஹ்மான் பஞ்சாப் அணிக்காக விளையாடவுள்ளார். சுழற்பந்து வீச்சாளரான இவர் தற்போது சர்வதேச டி20 ரேங்கில் 2ஆம் இடத்திலும், ஒருநாள் போட்டிக்கான தரவரிசையில் 3ஆம் இடத்திலும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பட் கம்மின்ஸ்

ஆஸ்திரேலிய அணியின் ஓபனிங் பவுலர் பட் கம்மின்ஸ் கொல்கத்தா அணியில் களம் காணவுள்ளார். சர்வதேச டெஸ்ட் தரவரிசையில் முதல் இடத்திலும், ஒருநாள் போட்டிக்கான தரவரிசையில் 4ஆம் இடத்திலும் உள்ளார். ரன்களை கட்டுப்படுத்துவதில் சிறந்த பவுலராக இருக்கிறார்.

ஜஸ்ப்ரித் பும்ரா, ட்ரெண்ட் போல்ட்

மும்பை அணிக்காக விளையாடு இந்திய அணியை சேர்ந்த வீரர் ஜஸ்ப்ரித் பும்ரா என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றாகும். இந்தியாவிற்கு பல வெற்றிகளையும், ஐபிஎல் போட்டிகளில் மும்பை அணிக்கு பல வெற்றிகளையும் பெற்றுக்கொடுத்தவர். இவரது பந்துவீச்சை எப்படிப்பட்ட பேட்ஸ்மேனும் எதிர்கொள்வது கடினம். கடைசி ஓவர் பந்துவீசுவதில் கில்லாடி. இவரைப் போன்று நியூசிலாந்து வீரர் ட்ரெண்ட் போல்ட்டும் மும்பை அணிக்கு தான் விளையாடுகிறார். இவரது பந்துவீச்சையும் குறைத்து மதிப்பிட முடியாது. சர்வதேச ஒருநாள் தரவரிசையில் முதலிடத்தில் இருந்த பும்ராவை இரண்டாம் இடத்திற்கு தள்ளி முதலிடம் பிடித்தவர் போல்ட் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜோஃப்ரா ஆர்ச்சர்

இங்கிலாந்து அணியை சேர்ந்த ஆர்ச்சர் ராஜஸ்தான் அணியில் விளையாடவுள்ளார். போனமுறை ஐபிஎல் போட்டிகளில் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தவர். இவரது பந்துவீச்சை கவனித்த இங்கிலாந்து அணி நிர்வாகம் உடனே 2019ஆம் ஆண்டு உலகக் கோப்பை அணியில் சேர்த்துக்கொண்டது.

நவ்தீப் சைனி, டேல் ஸ்டெயின்

தென்னாப்பிரிக்க அணியை சேர்ந்த அனுபவ வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெயின். இவரது முதல் ஓவரில் அனல் பறக்கும். ஆனால் ரன்களையும் சற்று கொடுத்துவிடுவார். இருந்தாலும் அணியின் நிலைமை மோசமடையும் போது விஸ்வரூபம் எடுத்து பந்துவீசுவார். இந்திய அணியின் இளம் பவுலர் நவ்தீப் சைனி. பும்ரா, புவனேஸ்வர் குமார் போன்ற அனுபவ வீரர்கள் இந்திய அணியில் இடம்பெற முடியாமல் போகும் சூழ்நிலையில் ரசிகர்களின் குரலாக சைனி இருக்கிறார். இளம் வீரர் என்பதால் வேகமும் அதிகம். இவர்கள் இருவருமே ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணியில் இருக்கின்றனர்.

ரஷித் கான்

ஆப்கானிஸ்தானை சேர்ந்த ரஷித் கான் ஹைதராபாத் அணியில் உள்ளார். இவரது பந்துவீச்சில் மேஜிக் உண்டு என பலரும் கூறுவார்கள். எப்படியாவது விக்கெட்டை பெற்றுவிடுவார். இதனால் இந்தியாவில் இவருக்கு தனி ரசிகர்கள் உருவாகிவிட்டனர். சர்வதேச டி20 போட்டிகளுக்கான தரவரிசையில் முதலிடத்தில் உள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com