2019ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட் விற்பனை மார்ச் 16ஆம் தேதி சென்னையில் துவங்குகிறது.
2019ஆம் ஐபிஎல் போட்டி வரும் மார்ச் 23ஆம் தேதி தொடங்கவுள்ளது. இந்தத் தொடரின் முதல் போட்டியே சென்னையில் தான் தொடங்குகிறது. கடந்த முறை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கோப்பையை வென்றதால், இந்த முறை முதல் போட்டி சென்னையில் நடக்கிறது. இதுவே ஐபிஎல் போட்டியின் வழக்கம்.
கடந்த ஐபிஎல் போட்டியின்போது காவிரி நதிநீர் போராட்டம் தமிழகத்தில் விஸ்வரூபம் எடுத்திருந்தது. அதனால், ஐபிஎல் போட்டிக்கு எதிராக பல கட்சிகளும் தமிழகத்தில், குறிப்பாக சென்னை சேப்பாக்கம் மைதானம் அருகே போராட்டத்தில் ஈடுபட்டனர். சாலை மறியல், கிரிக்கெட் ரசிகர்கள் மீது தாக்குதல், தடியடி, காவல்துறை மற்றும் கட்சியினர் இடையே மோதல் என அந்த நேரம் சேப்பாக்கம் கலவர பூமியாக காட்சியளித்தது. இதனால் கடந்த ஆண்டு சென்னையில் நடைபெறவிருந்த ஐபிஎல் போட்டிகள் ரத்து செய்யப்பட்டன. இருப்பினும் சென்னையிலிருந்து புனேவிற்கு சென்று ரசிகர்கள் ஐபிஎல் போட்டிகளை கண்டு வந்தனர். அவர்களுக்காக சிறப்பு ரயிலே ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்த நிலையில் இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளை சென்னையில் கண்டு ரசிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் கிரிக்கெட் ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர். சென்னையில் சேப்பாக்கம் மைதானத்தில் 23ஆம் தேதி நடைபெறும் முதல் போட்டிக்கான டிக்கெட் விற்பனை வரும் 16ஆம் தொடங்குகிறது. இந்த டிக்கெட்டுகளை வாங்க ஏராளமான ரசிகர்கள் அலைமோதுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டே டிக்கெட் விற்பனையின் போது, நள்ளிரவு முதலே ரசிகர்கள் வரிசையில் காத்திருந்தது குறிப்பிடத்தக்கது. சேப்பாக்கம் மைதானத்தில் மட்டுமின்றி, புக்மைசோவ் (Bookmyshow) என்ற இணையத்திலும் டிக்கெட் விற்பனை நடைபெறவுள்ளது.