பெங்களூர் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் மும்பை அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோதுகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. மும்பை அணியில் அல்சாரி ஜோசப்பிற்கு பதிலாக லசித் மலிங்கா சேர்க்கப்பட்டுள்ளார். பெங்களூர் அணியில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை.
இந்த இரு அணிகளும் நடப்பு ஐபிஎல் தொடரில் ஏற்கெனவே பெங்களூரூவில் மோதியுள்ளனர். அந்தப் போட்டியின் இறுதியில் நோ பால் சர்ச்சை எழுந்தது. அந்தப் போட்டியில் மும்பை அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அப் போட்டியில் பெங்களூர் அணி சார்பில் டிவில்லியர்ஸ் மற்றும் கோலி சிறப்பாக விளையாடினர். எனினும் இறுதியில் பெங்களூர் அணியால் வெற்றி இலக்கை எட்ட முடியவில்லை. அதற்கு பழிதீர்க்கும் வகையில் இன்று நடைபெறும் போட்டியில் பெங்களூர் அணி வெற்றி பெற முயற்சி செய்யும்.
இதுவரை ஐபிஎல் வரலாற்றில் மும்பை மற்றும் பெங்களூர் அணி 24 போட்டிகளில் விளையாடியுள்ளது. அதில் மும்பை 15 போட்டியிலும், பெங்களூர் அணி 9 போட்டியிலும் வெற்றிப் பெற்றுள்ளது. குறிப்பாக மும்பை வான்கடே மைதானத்தில் 2013ஆம் ஆண்டு முதல் நடைபெற்ற 6 போட்டிகளில் பெங்களூர் அணி மும்பை அணியை ஒரு முறை மட்டுமே வீழ்த்தியுள்ளது.