பஞ்சாப் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணி 218 ரன்கள் குவித்துள்ளது.
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் கொல்கத்தா மற்றும் பஞ்சாப் அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. பஞ்சாப் அணியில் மில்லர், வருண் சக்ரவர்த்தி மற்றும் ஆண்ட்ரூ டை மற்றும் வில்ஜோன் ஆகியோர் சேர்க்கப்பட்டனர். கொல்கத்தா அணி கடந்த போட்டியில் விளையாடிய அதே அணியுடன் இன்றும் களமிறங்கியது.
இதனையடுத்து கொல்கத்தா அணியின் கிறிஸ் லின் மற்றும் சுனில் நரேன் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். தொடக்கத்திலேயே அதிரடி காட்டிய சுனில் நரேன், வருண் சக்ரவர்த்தி வீசிய இரண்டாவது ஓவரில் மூன்று சிக்சர்கள் மற்றும் ஒரு பவுண்டரி அடித்தார். இதனையடுத்து கிறிஸ் லின்னும் (10) அதிரடி காட்ட துவங்கும் போது ஷமியிடம் விக்கெட்டை பறிக் கொடுத்தார்.
நரேன் 9 பந்துகளில் 24 ரன்கள் எடுத்து வில்ஜோன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அதன்பிறகு, களமிறங்கிய உத்தப்பா மற்றும் நிதிஷ் ரானா ஆகியோர் மூன்றாவது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்தனர். இவர்கள் இருவரும் அதிரடியாக ரன்கள் குவிக்க ஆரம்பித்தனர். குறிப்பாக, நிதிஷ் ரானா தனது சிறப்பான ஆட்டத்தால் கொல்கத்தா அணியின் ஸ்கோரை உயர்த்தினார். இவரும் உத்தப்பாவும் மூன்றாவது விக்கெட்டிற்கு 110 ரன்கள் சேர்த்தனர். நிதிஷ் ரானா 7 சிக்சர்கள் மற்றும் 2 பவுண்டரிகளுடன் 34 பந்துகளில் 63 ரன்கள் விளாசினார்.
இதனை தொடர்ந்து களமிறங்கிய ரஸல் உத்தப்பாவுடன் இணைந்து அதிரடி ஆட்டத்தை தொடர்ந்தார். குறிப்பாக ஷமி வீசிய 19ஆவது ஓவரில் மூன்று சிக்சர்கள் மற்றும் ஒரு பவுண்டரி அடித்து ஷமியின் பந்துவீச்சை நொறுக்கினார். இறுதியில் ரஸல் 5 சிக்சர்கள் மற்றும் 3 பவுண்டரிகளுடன் 17 பந்துகளில் 48 ரன்கள் எடுத்து வெளியேறினார். உத்தப்பா கடைசிவரை ஆட்டமிழக்காமல் 50 பந்துகளில் 67 ரன்கள் குவித்தார். கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 218 ரன்கள் எடுத்தது. பஞ்சாப் அணி சார்பில் டை, வருண் சக்ரவர்த்தி, ஷமி மற்றும் வில்ஜோன் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.