தடுப்புகளை தாண்டி அரங்கத்தையே அதிரவைத்த தோனி ரசிகர்!

தடுப்புகளை தாண்டி அரங்கத்தையே அதிரவைத்த தோனி ரசிகர்!
தடுப்புகளை தாண்டி அரங்கத்தையே அதிரவைத்த தோனி ரசிகர்!
Published on

சென்னை அணி வெற்றி பெற்றவுடன் தடுப்புகளையும் மீறி மைதானத்திற்குள் வந்த ஒரு ரசிகர் தோனியின் காலில் விழுந்து வணங்கினார்.

ஐபிஎல் தொடரின் 35வது ஆட்டம் இன்று மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் பெங்களூரு அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை அணி வீழ்த்தியது. முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 127 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் பர்திவ் 53 (41), சவுதி 36 (26), விராட் கோலி 8 (11) ரன்கள் எடுத்தனர். 128 ரன்கள் எடுத்தால் வெற்றி என பேட்டிங் செய்த சென்னை அணி சீரான இடைவெளியில் ரன்களை குவித்து வந்தது. சென்னையில் வாட்சன் 11 (14), அம்பதி ராயுடு 35 (25), ரெய்னா 25 (21), துருவ் 8 (9) ரன்கள் எடுத்து அவுட் ஆகினர். 4 விக்கெட்டுகள் போன நிலையில் கிரிக்கெட்டில் ‘தல’ என ரசிகர்களால் அன்பாக அழைக்கப்படும் சென்னை அணியின் கேப்டன் தோனி களத்தில் இறங்கினார். அவர் மைதானத்திற்குள் வரும் போது அரங்கம் அதிர, ரசிகர்கள் அவருக்கு விசில் வரவேற்பு அளித்தனர். 

ஆட்டத்தை தொடங்கிய தோனி, கேப்டன் என்ற பொறுப்புடன் மேலும் விக்கெட்டுகள் போகாமல் ரன்களை சீராக உயர்த்தினார். மறுபுறம் ப்ராவோ பந்துகளுக்கு ஏற்ப ரன்களை எடுத்து வந்தார். மெதுவாக சென்னை அணி இலக்கை நெருங்கியது. இலக்கை நெருங்கியது, தோனியின் அதிரடி தொடங்கியது. அவர் சிக்சர்கள் அடிக்க ஆரம்பித்தார். அரங்கம் அதிரத்தொடங்கியது. ரசிகர்கள் கொண்டாடத் தொடங்கினர். 

ஆட்டத்தின் முடிவில் 18 ஓவர்களிலேயே இலக்கை எட்டி, 6 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணி எளிமையான வெற்றியை பதிவு செய்தது. அந்த நேரத்தில் தடுப்புகளையும் மீறி ரசிகர் ஒருவர் மைதானத்திற்குள் ஓடிவந்தார். நேராக தோனியை நோக்கி ஓடிவந்த அந்த ரசிகர், வந்த வேகத்தில் தோனியின் காலில் விழுந்து வணங்கினார். அந்த நிகழ்வைக் கண்டு சென்னை அணியின் வீரர்கள் அனைவரும் எழுந்து நின்று தோனிக்கும், அந்த ரசிகருக்கும் கைதட்டினர். அரங்கமே ஒரு நிமிடம் அதிர்ந்து போனது. தோனி அந்த ரசிகரை ஆசி கூறி எழுப்பினார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com