ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடிய இரண்டாவது போட்டியிலும் த்ரில் வெற்றி பெற்றது.
11வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இந்தியாவில் தொடங்கி நடைப்பெற்று வருகிறது. இரண்டு ஆண்டு தடைக்கு பின்னர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோனி தலைமையில் களமிறங்கியுள்ளது. நடப்பு ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் மும்பையை வீழ்த்தி சென்னை அணி த்ரில் வெற்றி பெற்றது. இந்நிலையில் இரண்டாவது போட்டியில் சென்னை அணி தனது சொந்த மண்ணில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை நேற்று எதிர்க்கொண்டது.
இந்தப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பவுலிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா அணி, 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 202 ரன்களை குவித்தது. அந்த அணியில் அதிரடியாக விளையாடிய ஆன்ட்ரே ரஸல், சென்னை அணி வீரர்கள் வீசிய பந்துகளை நாலா புறமும் பறக்கவிட்டார். ரஸலின் ருத்ர தாண்டவத்தால் சென்னை ரசிகர்கள் கதிகலங்கினர். கடந்த போட்டியில் பிராவோ ஆடிய அதே ஆட்டத்தை ரஸல் இந்த போட்டியில் ஆடினார். இவரது அதிரடியால் ரன் ரேட் அதிகமானது. 38 பந்துகளை எதிர்கொண்ட ரஸல் 11 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி என 88 ரன்களை எடுத்தார். சென்னை அணி வெற்றி பெற 203 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து களமிறங்கிய சென்னை அணி ஆரம்பத்தில் இருந்தே சிறப்பாக விளையாடியது. வாட்சன் - அம்பத்தி ராயுடு இணை நல்ல தொடக்கத்தை ஏற்படுத்தியது. வாட்சன் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 19 பந்துகளில் 42 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இந்த இணை முதல் விக்கெட்டுக்கு 75ரன்கள் குவித்தது.
15 ஓவர்களைக் கடந்த நிலையில் ஆட்டம் பரபரப்பு தொற்றிக்கொண்டது. கடைசி 5 ஓவர்களுக்கு 58 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், அதிரடியாக விளையாடிய சாம் பில்லிங்ஸ் 23 பந்துகளில் 56 ரன்களை எடுத்து அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார். இறுதி ஓவரில் சென்னை அணியின் வெற்றிக்கு 17 ரன்கள் தேவைப்பட்டது. கடைசி ஓவரை வினய் குமார் வீசினார். முதல் பந்து நோபாலாக வீச அதனை பிராவோ சிகஸ்ருக்கு தூக்கினார். அதே பந்தில் இரண்டு ரன்களை எடுத்தார். இதனால் சற்று பதற்றம் தனிந்தது. ஒரு பந்து மீதம் இருந்த நிலையில், ஜடேஜா அடித்த சிக்சரால் சென்னை அணி வெற்றி பெற்றது.