ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணியும் புனே சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் இன்று மோதுகின்றன.
பத்தாவது ஐபிஎல் கிரிக்கெட் போட்டி ஹைதராபாத்தில் நேற்றுத் தொடங்கியது. இதில், ஹைதராபாத் சன் ரைசர்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், குஜராத் லயன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ரைசிங் புனே சூப்பர் ஜெயண்ட்ஸ், டெல்லி டேர்டெவில்ஸ், மும்பை இந்தியன்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் ஆகிய எட்டு அணிகள் பங்கேற்கின்றன. நேற்று நடந்த போட்டியில் பெங்களூர் அணியுடன் மோதிய, ஹைதராபாத் அணி வெற்றிப்பெற்றது.
இன்று மும்பை இந்தியன்ஸ் அணியும் ரெய்சிங் புனே சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் மோதுகின்றன. புனே அணியின் கேப்டனாக இருந்த தோனி, அதிலிருந்து நீக்கப்பட்டு ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஸ்டீவன் ஸ்மித் புதிய கேப்டனாகி இருக்கிறார். கேப்டன் பொறுப்பு இல்லாமல் வெறும் வீரராக இருப்பதால் தோனியின் ஆட்டத்தில் அனல் பறக்கும் என கூறப்படுகிறது.
அதே நேரம் காயம் காரணமாக இந்திய அணியில் இடம் பிடிக்காமல் இருந்த ரோகித் சர்மா, அதிலிருந்து மீண்டு ஐபிஎல் போட்டியில் இன்று களமிறங்குவதால் அவரும் ஆக்ரோஷம் காண்பிப்பார் எனத் தெரிகிறது. புனே மற்றும் மும்பை அணிகள், இதற்கு முன் இரண்டு முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. தலா ஒரு வெற்றியை பெற்றுள்ளன. இதனால் இன்றைய போட்டி ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என எதிர்பார்க்கலாம். போட்டி இன்று இரவு எட்டு மணிக்குத் தொடங்குகிறது.