ஐபிஎல் தொடரில் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி, 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஐபில் கிரிக்கெட் போட்டியில் நேற்று பெங்களூரு மற்றும் டெல்லி டேர்டெவில்ஸ் அணிகள் மோதின. டாஸில் வென்ற பெங்களூர் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. சின்னச்சாமி ஸ்டேடியத்தில் போட்டி நடைபெற்றது. சிக்ஸும் ஃபோருமாக விளாசுவார் என எதிர்பாக்கப்பட்ட கிறிஸ் கெயில் 6 ரன்களுடனும் மந்தீப் சிங் 12 ரன்களுடனும் பொறுப்பு கேப்டன் ஷேன் வாட்சன் 24 ரன்னுடனும் பெவிலியன் திரும்ப, சரிந்துகொண்டிருந்தது பெங்களூர் அணி. ஒரு பக்கம் விக்கெட் விழுந்து கொண்டிருந்தாலும் கேதர் ஜாதவ் பந்துகளை பவுண்டரிக்கு விளாசி ரசிகர்களை குஷிபடுத்தினார். இதனால் அந்த அணி, அணி 8 விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் எடுத்தது. கேதர் ஜாதவ் 37 பந்துகளில் 69 ரன்கள் விளாசினார். கிறிஸ் மோரிஸ் 3 விக்கெட்டுகளும், ஜாகீர் கான் 2 விக்கெட்டுகளும் எடுத்தனர்.
அடுத்து ஆடிய டெல்லி அணியால், பெங்களூர் அணியின் நேர்த்தியான பந்துவீச்சை எதிர்கொள்ளமுடியவில்லை. விக்கெட்டுகள் விழுந்த வண்ணம் இருந்தன. இளம் வீரர் ரிஷப் பண்ட் 36 பந்துகளில் 57 ரன்கள் எடுத்தார். மற்றவர்கள் சொற்ப ரன்களில் நடையை கட்டியதால் 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 142 ரன்களே எடுக்க முடிந்தது. ஸ்டென்லேக், இக்பால் அப்துல்லா, பவன் நெஹி ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
முதல் ஆட்டத்தில் ஹைதராபாத் அணியிடம் தோல்விகண்ட பெங்களூரு அணிக்கு இது முதல் வெற்றி.
முன்னதாக நடந்த மற்றொரு ஆட்டத்தில் பஞ்சாப் அணியும் புனே அணியும் மோதின. இதில் பஞ்சாப் அணி வெற்றிபெற்றது. பஞ்சாப் அணியில் இடம்பெற்ற தமிழக வீரர் டி.நடராஜன் தனது முதல் ஐபிஎல் விக்கெட்டை கைப்பற்றினார். இவர் வேகத்தில் விழுந்தவர் ரஹானே.