ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் நியமிக்கப்பட்டுள்ளார்.
பாலிவுட் பாட்சா ஷாருக்கானின் சொந்த அணியான கொல்கத்தா நைட்ரைடர்ஸில் வீரராக கடந்த 2011 முதல் 2013ம் ஆண்டு வரை விளையாடிய லஷ்மிபதி பாலாஜி, முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் இருந்து கடந்த 2016 செப்டம்பர் மாதம் ஓய்வு பெற்றார். தமிழக அணிக்காகவும், இந்திய அணிக்காகவும் விளையாடியுள்ள பாலாஜி, தமிழக கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக தற்போது பதவி வகித்து வருகிறார். இந்தநிலையில், 2017ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக பாலாஜி நியமிக்கப்பட்டுள்ளதாக அந்த அணியின் தலைமை செயலதிகாரி தெரிவித்துள்ளார். கடந்த 2012ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணி கோப்பையை வெல்ல பாலாஜி முக்கிய பங்கு வகித்ததாகவும் அந்த அணி நிர்வாகம் புகழுரை சூட்டியுள்ளது. இதுகுறித்து பேசிய பாலாஜி, கொல்கத்தா அணி வீரராக சிறப்பான அனுபவத்தைப் பெற்றேன். மீண்டும் அந்த அணியில் இணைவது மகிழ்ச்சி என நெகிழ்ந்துள்ளார். சென்னையைப் பூர்வீகமாகக் கொண்ட பாலாஜி, முதல்தர கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகளைப் படைத்தவராவார்.