சச்சினுக்கு எப்படி நடந்ததோ.. தோனிக்கும் அப்படியே நடந்திருக்க வேண்டும்’ - இன்சமாம் உல்-அக்

சச்சினுக்கு எப்படி நடந்ததோ.. தோனிக்கும் அப்படியே நடந்திருக்க வேண்டும்’ - இன்சமாம் உல்-அக்
சச்சினுக்கு எப்படி நடந்ததோ.. தோனிக்கும் அப்படியே நடந்திருக்க வேண்டும்’  - இன்சமாம் உல்-அக்
Published on

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி தனது ஓய்வை மைதானத்தில் ரசிகர்கள் முன்பு அறிவித்திருக்க வேண்டும் என பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல்-அக் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கோடிக்கணக்கான ரசிகர்களைக் கொண்ட கிரிக்கெட் வீரரான மகேந்திர சிங் தோனி அனைத்து வித சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக கடந்த 15ஆம் தேதி அறிவித்தார். அவரது இந்த அறிவிப்பு ரசிகர்களுக்கு பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியது. பலரும் தோனியின் நினைவுகளை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தனர். முன்னாள் கிரிக்கெட் சச்சின் டெண்டுல்கரை போன்று தோனியும் ஃபேர்வெல் போட்டி ஒன்றில் விளையாடியிருக்க வேண்டும் என தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் யூடியூப் சேனலில் பேசியிருக்கும் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல்-அக், “தோனிக்கு ஒரு போட்டியை எப்படி முடிக்க வேண்டும் என தெரியும். அவர் ஒற்றை மனிதராக போட்டியை வெற்றி பெற வைப்பவர். அனைத்து போட்டிகளிலும் சதம் அடிக்க வேண்டும் என நினைக்க மாட்டார். ஆனால் தேவைப்படும்போது தனது பேட்டிங்கை வெளிப்படுத்தி அணியை வெற்றிக்கு அழைத்துச்செல்வார். தோனிக்கு வீரர்களை எப்படி மேம்படுத்துவது என்பது நன்றாக தெரியும். அவர் ஆட்டத்தின் சூழலை புரிந்துகொண்டு அதற்கேற்ப வீரர்களை தேர்வு செய்வார். அந்த வீரர்களை பின்னாளில் சிறந்த வீரர்களாகவும் மாற்றுவார். அந்த வகையில் உருவான சிறந்த வீரர்கள் தான் ரெய்னாவும், அஸ்வினும் ” என்று தெரிவித்துள்ளார்.

அத்துடன், “தோனிக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். அவர் தனது ஓய்வை வீட்டிலிருந்து அறிவித்திருக்கக்கூடாது. மைதானத்தில் ரசிகர்கள் முன்பு அறிவித்திருக்க வேண்டும். சச்சின் ஓய்வு முடிவை எடுக்கம்போது, மைதானத்தில் ரசிகர்கள் முன்பு அறிவிக்க வேண்டும் என நான் தெரிவித்தேன். அவரும் அதேபோன்று ஃபேர்வெல் போட்டி விளையாடி அறிவித்தார். தற்போது தோனியும் அதேபோன்று மைதானத்தில் அறிவித்தால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைவார்கள்” என இன்சமாம் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com