இந்திய கிரிக்கெட் அணி வரலாற்று சிறப்புமிக்க டெஸ்ட் வெற்றியை பதிவு செய்துள்ளது. நீண்ட நாட்களுக்கு பிறகு டெஸ்ட் போட்டி, ‘நகம் கடிக்கும்’ நிலைக்கு ரசிகர்களை கொண்டு சென்றது. இந்திய கிரிக்கெட் அணி வெற்றிப்பெற இந்தியாவுக்காக ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக விளையாடி அசத்திய இளம் இந்திய வீரர்கள் குறித்து ஸ்வாரஸ்ய தகவல்கள்.
நடராஜன்
ஏழை நெசவாளியின் மகனான நடராஜனுக்கு ஷூ, கிரிக்கெட் சாதனங்கள் வாங்க முடியாத நிலை இருந்தது. ஒரு புதிய ஷூ வாங்க நூறு முறை யோசிப்பார். இந்திய அணிக்காக தன் மகன் விளையாடியதை டிவியில் பார்த்து அழுதார் நடராஜன் தாயார்.
நடராஜன் அமீரகத்தில் ஐபிஎல் தொடரில் விளையாடிக் கொண்டிருக்கும்போதுதான் அவரது மனைவிக்கு குழந்தை பிறந்தது. பயோ பபுளில் இருக்க வேண்டியிருந்ததால் ஐபிஎல் தொடரை முடித்துக் கொண்டு நேராக ஆஸ்திரேலியா சென்றார் நடராஜன். அதனால், தற்போது வரை தன்னுடைய குழந்தையை நடராஜன் பார்க்கவேயில்லை.
ஷர்துல் தாக்கூர்
மகாராஷ்டிராவில் சிறிய நகரத்தில் பிறந்த ஷர்துல் தாக்கூர் தன்னுடைய கிரிக்கெட் கனவை அடைய நூறு கிலோமீட்டர் தூரம் பயணித்து மும்பை செல்லவே மிகவும் சிரமப்பட்டார். மிகுந்த போராட்டத்திற்கு பிறகே உள்ளூர் போட்டிகளில் மும்பைக்காகவும் பின்னர் ஐபிஎல் தொடரிலும் விளையாடினார்.
வாஷிங்டன் சுந்தர்
வாஷிங்டனின் தந்தை சுந்தர் ஒரு திறமையான கிரிக்கெட் வீரர். சுந்தர் கிரிக்கெட் வீரராக உருவாக பொருளாதார ரீதியில் மிகப்பெரிய ஒத்துழைப்பு அளித்த வாஷிங்டன் என்ற நபரின் பெயரைத்தான் தன்னுடைய மகனுக்கு அவர் வைத்தார்.
நவ்தீப் சைனி
நவ்தீப் சைனியின் தந்தை அரசு டிரைவர். ஆனால், சைனிக்கு கிரிக்கெட் கோச்சிங் வசதி ஏற்படுத்தி தரும் அளவில் அவருக்கு பொருளாதார வசதி இருக்கவில்லை. அதனால், சைனி டோரன்மெண்ட் போட்டிகளில் பங்கேற்று விளையாடி தன்னுடைய கனவை நிறைவேற்ற பணம் சேர்த்தார்.
முகமது சிராஜ்
ஆட்டோ ரிக்ஷா டிரைவரின் மகனாக பிறந்த முகமது சிராஜ் இன்று இந்திய அணியின் நியூ பால் ஸ்பெஷலிஸ்ட்டாக வளர்த்துள்ளார். சிராஜ் ஆஸ்திரேலியாவில் தங்கியிருந்தபோது அவரது தந்தை உயிரிழந்தார். இருப்பினும் அவருக்கு இறுதி அஞ்சலி கூட செலுத்த முடியாத சிராஜ் இந்தியாவுக்காக விளையாடி அசத்தினார். இந்த தொடரில் 13 விக்கெட்டுகளை சிராஜ் வீழ்த்தியுள்ளார்.