மல்யுத்த தகுதிப் போட்டியில் இருந்து சுஷில்குமார் விலகல்

மல்யுத்த தகுதிப் போட்டியில் இருந்து சுஷில்குமார் விலகல்
மல்யுத்த தகுதிப் போட்டியில் இருந்து சுஷில்குமார் விலகல்
Published on

ஒலிம்பிக் தகுதி போட்டியிலிருந்து விலகினார் பிரபல மல்யுத்த வீரரான சுஷில்குமார்.

இந்திய மல்யுத்த வரலாற்றில் மிக முக்கியமான வீரர் சுஷில்குமார். இவர் 2008 ஆம் ஆண்டு சீனாவில் நடைபெற்ற பீஜிங் ஒலிம்பிக்கில் வெண்கலமும், 2012 ஆம் ஆண்டு லண்டன் ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கமும் கைப்பற்றி வரலாறு படைத்தார். ஒலிம்பிக்கில் தனிநபர் பிரிவில் இரண்டு பதக்கம் வென்ற ஒரே இந்தியர் இவர் தான்.

சுஷில்குமார் அடிக்கடி ஏற்படும் காயத்தின் காரணமாக அவதிப்பட்டு வந்தார். இதன் காரணமாக 2020 ஒலிம்பிக்கில் அவர் விளையாடுவாரா என்ற சந்தேகம் எழுந்தது, அவர் ஒலிம்பிக்கில் விளையாட வேண்டும் என்றால் தகுதிச் சுற்றுப் போட்டிகளில் பங்கேற்று வெறிப்பெற வேண்டும். இந்தாண்டு ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியாவில் நடைபெறுகிறது. இதற்கு முன்னதாக ஆசிய ஒலிம்பிக் தகுதி சுற்று சீனாவில் மார்ச் மாதம் நடைபெறுகிறது.

இதில் முதல் இரண்டு போட்டிக்கான இந்திய ஆண்கள் அணியை தேர்வு செய்வதற்கான தகுதி போட்டிகள் டெல்லியில் உள்ள கே.டி.ஜாதவ் மல்யுத்த உள்விளையாட்டு அரங்கத்தில் இன்று தொடங்குகிறது. இதில் பிரீஸ்டைல் 74 கிலோ எடைப்பிரிவில் சுஷில்குமாரும் கலந்து கொள்வதாக இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் பின்வாங்கிய சுஷில்குமார், “பயிற்சியின் போது எனக்கு கையில் லேசான எலும்பு முறிவு ஏற்பட்டு விட்டது. காயம் முழுமையாக குணமடைந்த பிறகே போட்டியில் பங்கேற்க முடியும். எப்படியும் 2 வாரத்திற்குள் உடல்தகுதியை எட்டி விடுவேன். எனவே எனது பிரிவுக்குரிய தகுதி போட்டியை தள்ளிவைக்க வேண்டும்” என்று இந்திய மல்யுத்த சம்மேளனத்தை கேட்டுக் கொண்டார். மேலும் தனது காயம் தொடர்பான மருத்துவ சான்றிதழையும் மல்யுத்த சம்மேளனத்துக்கு அனுப்பி வைத்தார்.

இது குறித்து ஆலோசனை நடத்திய இந்திய மல்யுத்த சம்மேளனம் சுஷில்குமாரின் கோரிக்கையை நிராகரித்து விட்டது. எனவே திட்டமிட்டப்படி தகுதி போட்டிகள் இன்று நடைபெறுகிறது. இந்திய மல்யுத்த சம்மேளனம் கூறும்போது "தகுதி போட்டியை தள்ளிவைக்கும் பேச்சுக்கே இடமில்லை. சுஷில்குமார் காயமடைந்தாலும் கூட 74 கிலோ பிரிவில் பங்கேற்க எங்களிடம் வீரர்கள் உள்ளனர். இந்தப் பிரிவில் வெற்றிப் பெறும் வீரர் ரேங்கிங் தொடரில் எப்படி செயல்படுகிறார் என்பதை பார்க்க வேண்டும். அதன் பிறகு அடுத்து என்ன செய்வது என்பதை முடிவு செய்வோம். ஒரு வேளை மார்ச் மாதம் நடக்கும் ஒலிம்பிக் போட்டிக்கான ஆசிய தகுதி சுற்றுக்கு நம்மிடம் வலுவான வீரர் இல்லை என்று உணரும் பட்சத்தில், சுஷில்குமாரை தகுதி போட்டியில் பங்கேற்கும்படி அழைக்க வாய்ப்புள்ளது" என தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com