சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இலங்கையை வென்று இறுதி போட்டிக்கு முன்னேறி இருக்கிறது பாகிஸ்தான் அணி. அந்தப் போட்டியின் முடிவில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய பாகிஸ்தான் கேப்டன் சர்ப்ராஸ் அகமது, தட்டுத்தடுமாறி ஆங்கிலத்தில் பதிலளித்தார். இந்த வீடியோவை வெளியிட்டு இந்திய இணையதளம் ஒன்று அவரை கிண்டல் செய்திருந்தது. இது சமூகவலைத்தளங்களில் வைரலானது. ’பாகிஸ்தான் வீரர்கள் எல்லாருமே அரைகுறை ஆங்கிலத்தில்தான் பேசுவார்கள்’ என்கிற ரீதியில் வீடியோவை வெளியிட்டு கிண்டலடித்திருப்பதற்கு இந்திய ரசிகர்கள் சிலர் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள்.
ஸ்ரீதம் மிஸ்ரா என்ற ரசிகர், ’நான் இந்தியன்தான். ஆனால் இதுபோன்று ஒரு வீரரை கிண்டலடிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. அவருக்கு ஆங்கிலம் தெரியவில்லை என்றால் என்ன? அவர் கிரிக்கெட்டர். டிவி தொகுப்பாளரல்ல. திறமையால் அணியை இறுதி போட்டிக்கு கொண்டு வந்திருக்கிறார். அதைப் பாராட்டுங்கள்’ என்று கூறியுள்ளார். இதையடுத்து இன்னும் சிலரும் அவருக்கு ஆதரவாக குரல் கொடுக்க, இந்திய ரசிகர்களின் இந்தப் போக்கை பாகிஸ்தான் ரசிகர்கள் வரவேற்றுள்ளனர்.