எஃப்.ஐ.ஹெச் மகளிர் ஹாக்கி தொடரின் இறுதிப்போட்டியில் ஜப்பானை வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றது.
2019ஆம் ஆண்டின் எஃப்.ஐ.ஹெச் ஒலிம்பிக் தொடரில் பங்கேற்பதற்கு இந்திய அணி தகுதி பெற்றுள்ளது. இந்நிலையில் எஃப்.ஐ.ஹெச் மகளிர் ஹாக்கி தொடரின் இறுதிப்போட்டி இன்று ஜப்பானில் உள்ள ஹைரோஷிமா ஹாக்கி மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்தியா மற்றும் ஜப்பான் அணிகள் மோதின. போட்டி தொடங்கிய மூன்றாவது நிமிடத்தில் இந்திய அணியின் கேப்டன் ராணி கோல் அடித்தார். இதனால் இந்திய அணி முன்னிலை பெற்றது.
விறுவிறுப்புடன் ஆட்டம் சென்றிகொண்டிருந்த போது, 11வது நிமிடத்தில் ஜப்பான் அணியின் கனோன் மோரி கோல் ஒன்றை பதிவு செய்தார். இதனால் இரண்டு அணிகளும் சரிக்கு சமமான கோல்களை பெற்றது. இதன்பின்னர் இரு அணிகளும் கோல் அடிப்பதற்கு கடுமையாக போராடின. பின்னர் 45வது நிமிடத்தில் இந்திய அணி குர்ஜித் கவுர் கோல் அடித்தார். அத்துடன் 60வது நிமிடத்தில் மீண்டும் ஒரு கோலை அடித்து அசத்தினார் குர்ஜித். இதனால் இந்திய அணி 3-1 என்ற கணக்கில் ஜப்பான் அணியை வீழ்த்தி இறுதிப்போட்டியை வென்றது.