இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணியுடனான முதலாவது ஒருநாள் போட்டியில் 66 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய மகளிர் அணி வெற்றி பெற்றுள்ளது.
இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடுகிறது. இரு அணிகளுக்கும் இடையில் மூன்று ஒரு நாள் போட்டி மற்றும் மூன்று டி20 போட்டிகள் நடைபெற உள்ளன. முதலாவது ஒரு நாள் போட்டி மும்பையில் இன்று நடந்தது. இரண்டாவது மற்றும் மூன்றாவது போட்டிகள் வரும் 25 மற்றும் 28 ஆம் தேதிகளில் நடக்கிறது.
இந்நிலையில் இன்று நடந்த முதலாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து மகளிர் அணி பவுலிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த இந்திய மகளிர் அணி 49.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 202 ரன்கள் சேர்த்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக ராட்ரீகெஸ் 48 ரன்களும், கேப்டன் மீத்தாலி ராஜ் 44 ரன்கள் எடுத்தனர். இங்கிலாந்து தரப்பில் எல்விஸ், ஸ்சிவெர் மற்றும் எக்லெஸ்டோன் தலா 2 விக்கெட்டுகளைச் சாய்த்தனர்.
இதனைத் தொடர்ந்து 203 ரன்களை இலக்காக கொண்டு இங்கிலாந்து மகளிர் அணி விளையாட தொடங்கியது. தொடக்கம் முதலே இந்திய மகளிரின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் இங்கிலாந்து அணியினர் தினறினர். முதல் 15 ஓவர்களில் மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து, அதன்பின்னர் ஜோடி சேர்ந்த நைட் மற்றும் ஸ்சிவெர் அணியை சரிவிலிருந்து மீட்க போராடினர்.
இருப்பினும் இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சால் சீரான இடைவேளையில் இங்கிலாந்து அணியினர் விக்கெட்டுகளை பறிக்கொடுத்து வந்தனர். இறுதியில் இங்கிலாந்து மகளிர் அணி 41 ஓவர்களில் 136 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, படுதோல்வியடைந்தது. இந்திய மகளிர் அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்திய அணியில் ஏக்தா பிஸ்ட் சிறப்பாக பந்துவீசி 4 விக்கெட்டுகளைச் சாய்த்தார். இதன் மூலம் ஏக்தா பிஸ்ட் ஆட்டநாயகி விருதை தட்டிச் சென்றார்.