இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலிய அணியுடன் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் மெல்பேர்ன் கிரிக்கெட் மைதானத்தில் விளையாடி வருகிறது. பாக்சிங் டே டெஸ்ட் போட்டியான இந்த ஆட்டத்தில் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா 195 ரன்களும், இந்தியா 326 ரன்களும் எடுத்தன.
தொடர்ந்து இரண்டாவது இன்னிங்க்ஸை 131 ரன்கள் பின்தங்கிய நிலையில் தொடங்கியது ஆஸ்திரேலியா. பெர்ன்ஸ், லபுஷேன், ஸ்மித் என டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் வரிசையாக விக்கெட்டுகளை இழந்த நிலையில் தொடக்க வீரர் மேத்யூ வேட் அசராமல் இந்திய பந்துவீச்சை எதிர்கொண்டார். தொடர்ச்சியாக பல பந்துகளை டாட் பாலாக அவர் விளையாடி இருந்தாலும் ஆட்டத்தில் செட்டாகி இருந்தார்.
இந்நிலையில் இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் அவரை ஸ்டெம்புக்கு பின்னால் நின்று கொண்டு வம்பிழுத்துக் கொண்டிருந்தார். குறிப்பாக பும்ரா பந்து வீசிய ஆஸ்திரேலிய இன்னிங்ஸின் 25வது ஓவரின் முதல் பந்தை லெக் சைடில் தட்டி விட்டிருப்பார். அதற்கு உடனே பண்ட் ‘இந்த பந்தில் நீ அவுட்டாகி இருக்க வேண்டுமென்ற தொனியில்’, ‘ஹி...ஹி...ஹி…’ என நக்கல் செய்ய அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக வேடும் “ஹி...ஹி...ஹி… நீங்களே உங்களை பெரிய திரையில் பார்க்கிறீர்களா?” என சொல்லியிருந்தார். அது ஸ்டெம்பில் இருந்த கேமிராவில் பதிவாகி இருந்தது.
அதற்கு முன்னர் வரை பண்ட் சொல்லியதற்கு எல்லாம் வெறுமனே முறைத்து பார்த்திருந்தார் வேட். இறுதியில் 137 பந்துகளை சந்தித்த நிலையில் 40 ரன்களுக்கு அவுட்டானார் வேட். ஆஸ்திரேலியா 58 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 120 ரன்களை எடுத்துள்ளது.