“அப்பாவின் விருப்பத்திற்காக விளையாட தொடங்கினேன்” - கைப்பந்து கேப்டன் ஷாலினி

“அப்பாவின் விருப்பத்திற்காக விளையாட தொடங்கினேன்” - கைப்பந்து கேப்டன் ஷாலினி
“அப்பாவின் விருப்பத்திற்காக விளையாட தொடங்கினேன்” - கைப்பந்து கேப்டன் ஷாலினி
Published on

இந்திய கைப்பந்து அணியின் கேப்டனாக தமிழகத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஷாலினி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த கோலாத்துகோம்மைபுதூரை சேர்ந்த ஷாலினி ஒரு விவசாய குடும்பத்தை சார்ந்தவர். இவர் புனேவில் நடந்த ஆசிய அளவிலான மகளிர் கைப்பந்து தேர்வுப் போட்டிகளில் விளையாடி வந்தார். இந்தப் போட்டிகளில் விளையாடி மாணவிகளில் இருந்து 12 பேர் 19 வயதுக்கு உட்பட்ட அணிக்கு தேர்வு செய்யப்பட்டனர். இதில் தமிழகத்தைச் சேர்ந்த ஷாலினி அணியின் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

விவசாயக் குடும்பத்தில் பிறந்த ஷாலினி ஆர்வத்துடன் கைப்பந்து விளையாடி இந்திய அணிக்கு கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளதால் அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் புதிய தலைமுறை இணையத்தில் சார்பாக அவரிடம் பேசினோம். 

நீங்கள் எப்போது கைப்பந்து விளையாட ஆரம்பித்தீர்கள் ?


 
“நான் பள்ளியில் ஆறாம் வகுப்பு படிக்கும் போதே என் அப்பாதான் இந்த விளையாட்டில் என்னை சேர்த்துவிட்டார். அப்போது இந்த விளையாட்டை பற்றி எனக்கு ஒன்றுமே தெரியாது. வீட்டில் சேர்த்துவிட்டதால் போனேன். என் அப்பாவின் நண்பர் சேகர்தான் எனக்கு பயிற்சியாளர். அவர் மூலமாகதான் இந்த விளையாட்டின் மீதான ஆர்வம் அப்பாவுக்கு வந்தது.”

பொதுவாக கிராம பகுதிகளில் பெண் விளையாட வீட்டில் உள்ளவர்கள் முட்டுக்கட்டை போடுவார்களே? உங்களை எப்படி விட்டார்கள்? 
 
“தெரியவில்லை. அப்பாதான் என்னை உற்சாகப்படுத்தினார். நான் சிறுவயதாக இருக்கும் போதே முறையான கோட்ச் வைத்து சொல்லிக் கொடுக்க ஏற்பாடு செய்துவிட்டார். அவரது விருப்பத்திற்காக ஆரம்பத்தில் விளையாடினேன். அதற்கு பிறகு எனக்கே ஆர்வம் அதிகரித்துவிட்டது. இன்று வரை என் குடும்பம்தான் எனக்கு பெரிய பக்கபலமாக இருக்கிறது.  

நான் பள்ளியில் படிக்கும் போது பல போட்டிகளில் விளையாடினேன். 8 ஆம் வகுப்பு படிக்கு போது நான் தமிழக அணிக்காக விளையாடியுள்ளேன். அப்போது இருந்து ஆர்வத்துடன் விலையாடி வருகிறேன். 12 வகுப்பு படிக்கு போது நான் தமிழக அணி சார்பில் கேரளாவுக்கு போய் விளையாடிய போது எனது ஆட்டம் சிறப்பாக இருந்ததாக பலரும் கூறினர். அதிலிருந்து ஆர்வம் மேலும் அதிகமானது. அந்தப் போட்டி என் வாழ்நாளில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தி கொடுத்தது. இதற்கு பிறகு பயிற்சியாளர் ஸ்ரீதர் என்னை பாரட்டினார். விருதும் கிடைத்தது.” 

கல்லூரி வந்த பிறகு எப்படி ? 

“நான் கோபியிலுள்ள தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறேன். கல்லூரியில் பயிற்சியாளர் ஆனந்தகுமார் எனக்கு பயிற்சி அளித்தார். இதில் எனக்கு நிறைய வேறுபாடுகள் தெரிந்தன. ஆகவே அதிகம் பயிற்சி எடுத்தேன். கல்லூரிகளுக்கு இடையே நடக்கும் போட்டிகளில் விளையாடினேன். பல்கலைக் கழங்க அளவில் விளையாடி உள்ளேன். அப்படி தான் கோழிக்கோட்டில் இந்திய  அணிக்கான தேர்வில் கலந்து கொண்டேன். அங்கே இந்தியா முழுவதிலும் இருந்து 100க்கும் மேற்பட்டோர் கலந்துக் கொண்டனர். அதில் நானும் பங்கேற்று தேர்வானேன். இதில் என்னுடன் தமிழகத்தைச் சேர்ந்த ஜோதி என்ற மாணவியுடன் சேர்த்து மொத்தம் 24பேர் தேர்வாகினோம்.”

கேப்டன் ஆனது எப்படி ? 

“இந்திய கைப்பந்து பெடரேஷன் சார்பில் நடந்த தேர்வில் தேர்வானதால் புனேவில் ஒரு மாதம் பயிற்சி எடுத்து, ஆசிய அளவிலான மகளிர் கைப்பந்து தேர்வுப் போட்டிகளில் விளையாடி வந்தேன். அந்தப் போட்டிகளில் விளையாடி மாணவிகளில் இருந்து 12 பேரில் நானும் ஒருவளாக தேர்வானேன். ஆகவே 19 வயதுக்கு உட்பட்ட மகளிர் கைப்பந்து அணிக்கு கேப்டனாக தேர்வு செய்யப்பட்டேன்.”

அடுத்த இலக்கு ?

“கைப்பந்து போட்டிகளில் இந்தியாவுக்காக விளையாட வேண்டும். அனைத்து போட்டிகளிலும் சிற்பாக விளையாடி பெருமை சேர்க்க வேண்டும். மேலும் எனக்கு ஒரு நல்ல வேலை கிடைத்தால் மகிழ்ச்சியாக இருக்கும்.” என்கிறார் ஷாலினி. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com