சவுதம்டனில் இதெல்லாம் இந்திய அணிக்கு சவால்களாக இருக்கும் - விவரிக்கிறார் அஜித் அகர்கர்

சவுதம்டனில் இதெல்லாம் இந்திய அணிக்கு சவால்களாக இருக்கும் - விவரிக்கிறார் அஜித் அகர்கர்
சவுதம்டனில் இதெல்லாம் இந்திய அணிக்கு சவால்களாக இருக்கும் - விவரிக்கிறார் அஜித் அகர்கர்
Published on

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிராக இந்தியா எதிர்கொள்ள இருக்கும் சவால்கள் குறித்து முன்னாள் வீரர் அஜித் அகர்கர் பேசியுள்ளார்.

இது குறித்து ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பேசிய அவர் "இந்திய அணியினர் தங்களின் திறன் மீது அதிக நம்பிக்கை வைத்திருக்க வேண்டும். இந்தியாவில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் எப்படி நாம் விளையாடினோம் என்பதை நினைத்து பார்க்க வேண்டும். இங்கிலாந்து அணிக்கு எதிராக முதல் டெஸ்ட் போட்டியில் நாம் தோற்றாலும் நாம் அடுத்தடுத்தப் போட்டிகளில் பலம் வாய்ந்த அணியாக உருவெடுத்து அவர்களை வென்றோம். அதேபோலதான் ஆஸ்திரேலிய தொடரிலும் நிகழ்ந்தது. அதனை நாம் நினைத்து பார்க்க வேண்டும்" என்றார்.

மேலும் பேசிய அஜித் அகர்கர் "ஆஸ்திரேலிய தொடரின் தொடக்கத்தில் முகமது ஷமி போன்ற நம்பர் 1 பவுலர்கள் இருந்தாலும், இறுதியில் நமக்கு ஷர்துல் தாக்கூர், நடராஜன், முகமது சிராஜ் ஆகியோர் பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய பேட்டிங்கை திறமையாக சமாளித்தனர். அதனால் இந்திய அணிக்கு நல்ல அனுபவமும், இளமையும் கொண்ட வீரர்கள் இருக்கிறார்கள். அதுதான் இந்தியாவின் பலம் என நினைக்கிறேன். ஆஸ்திரேலிய, இந்திய தொடர்கள் மட்டுமல்லாமல் கடந்த சில ஆண்டுகளாகவே நாம் டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறப்பாகவே செயல்பட்டு இருக்கிறோம்" என்றார் அவர்.

தொடர்ந்து பேசிய அவர் "நியூசிலாந்து அணியில் நிறைய வெரைட்டியான பவுலர்கள் இருக்கிறார்கள். ஜேமிசன், போல்ட் மற்றும் சவுத்தி ஆகியோர் இந்தியாவின் சவால்களாக இருக்கிறார்கள். அவர்களால் பந்தை எந்தப் பக்கம் வேண்டுமானாலும் ஸ்விங் செய்யும் ஆற்றல் கொண்டவர்கள். அதேபோல வாக்னர், எந்த பிட்சாக இருந்தாலும் விக்கெட்டை எடுக்க கூடிய திறன் படைத்தவர். அதனை அவர் பல முறை நியூசிலாந்துக்காக செய்திருக்கிறார். இந்த பவுலிங் வரிசை இந்திய பேட்ஸ்மேன்களுக்கு சவாலானதாகவே இருக்கும்" என்றார் அகர்கர்.

"அதேபோல இங்கிலாந்தின் தட்பவெட்பநிலை, நியூசிலாந்துக்கு சாதகமாகவே இருக்கும். அதேபோல இங்கிலாந்தில் பயன்படுத்தப்படும் டியூக் பந்தும் இந்தியாவுக்கு சவாலானதாகவே இருக்கும். என்னதான் ஆஸ்திரேலியாவில் விளையாடி இருந்தாலும் இந்தியாவுக்கு இங்கிலாந்தின் சீதோஷனமும், பிட்ச்சும் சவாலானதாகவே இருக்கும். அதனால் இந்திய கிரிக்கெட் வீரர்கள் போட்டிக்கு முன்பாக தங்களை போதுமான அளவுக்கு தயார் படுத்திக்கொள்ள வேண்டும்" என்றார் அஜித் அகர்கர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com