இந்தியா தென்னாப்பிரிக்கா இடையேயான முதல் டி20 போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றது.
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்க அணி மூன்று ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. இந்நிலையில் தொடரின் முதல்போட்டி திருவனந்தபுரத்தில் இன்று நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த தென்னாப்ரிக்க அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் 106 ரன்கள் மட்டுமே எடுத்தது. பின்னர் விளையாடிய இந்திய அணி 16.4 ஓவர்களில் 20 பந்துகள் மீதமிருக்கையில் 110 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
டாஸ் வென்று இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். முதலில் களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணி இந்திய பந்துவீச்சாளர்கள் தீபக் சாஹர் மற்றும் அர்ஸ்தீப் சிங்கின் அசத்தலான பந்துவீச்சில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. 9 விக்கெட்டுகளுக்கு 5 விக்கெட்டுகளை இழந்த நிலையில், குறைவான ரன்களையே இலக்காக நிர்ணயிக்கும் என்றே எதிர்ப்பார்க்கப்பட்டது.
தொடர்ந்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீட்க போராடிய மார்க்ரம் மற்றும் கேசவ் மஹாராஜ் இருவரின் நிதானமான பேட்டிங்கால் தென்னாப்பிரிக்க அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 106 ரன்களை எடுத்தது. அதிரடியாக பந்துவீசிய அர்ஸ்தீப் சிங், தீபக் சாஹர் மற்றும் ஹர்சல் பட்டேல் மூவரும் 3 விக்கெட்டுகள் மற்றும் தலா இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர். தென்னாப்பிரிக்க அணியில் கேசவ் மஹாராஜ் மட்டும் 35 பந்துகளில் 5 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்சர்களுடன் 41 ரன்கள் எடுத்தார்.
இந்நிலையில் 107 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று களமிறங்கிய இந்திய அணியில், இந்திய அணி கேப்டன் 0 ரன்களுக்கு வெளியேறி அதிர்ச்சியளித்தார். விராட் கோலியும் 3 ரன்களுக்கு வெளியேற பின்னர் கேஎல் ராகுலுடன் இணைந்த சூரியகுமார் யாதவ் அதிரடியாக விளையாட இந்திய அணி 17ஆவது ஓவரில் 107 ரன்கள் இலக்கை எட்டி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
நிலைத்து நின்று விளையாடிய கேஎல் ராகுல் மற்றும் சூரியகுமார் யாதவ் இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர். இருவருக்கும் அரைசதம் அடிக்கும் வாய்ப்பு இருந்த நிலையில் 45 ரன்களில் இருந்த கேஎல் ராகுல் ஒரு ரன் எடுத்து ஸ்டிரைக்கை 49 ரன்களில் இருந்த சூரியகுமார் யாதவிற்கு அளித்தார். பின்னர் சிங்கிள் ஆடிய சூரியகுமார் யாதவ் 50 அடித்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை கேஎல் ராகுல் அளித்தார். இறுதியில் சிக்சர் விளாசிய கேஎல் ராகுலும் அரைசதம் அடித்து அசத்தினார். இறுதியில் கேஎல் ராகுல் 2 பவுண்டரிகள், 4 சிக்சர்கள் விளாசி 56 பந்துகளில் 51 ரன்கள் எடுத்தார். அதிரடியாக விளையாடிய சூரியகுமார் யாதவ் 5 பவுண்டரிகள், 3 சிக்சர்கள் விளாசி 33 பந்துகளில் 50 ரன்கள் அடித்து அசத்தினார்.