ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் சாம்பியன் பட்டத்திற்கான இறுதிப் போட்டியில் சென்னையின் எஃப்.சி. மற்றும் பெங்களூரு எஃப்.சி. அணிகள் இன்று மோதுகின்றன. பெங்களூருவில் இரவு 8 மணிக்கு போட்டி தொடங்குகிறது.
நான்காவது ஐஎஸ்எல் கால்பந்து போட்டித்தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அறிமுக அணியாக நான்காவது ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் களமிறங்கிய பெங்களூரு அணி, முதல் தொடரிலேயே இறுதி ஆட்டம் வரை முன்னேறியுள்ளது. லீக் சுற்றில் முதலிடம் பிடித்த பெங்களுரு அணி, அரையிறுதியில் புனே அணியை வீழ்த்தியது. வெனிசுலாவின் Miku 14 கோல்களும், இந்தியாவின் சுனில் சேத்ரி 10 கோல்களும் அடித்து பெங்களூரு அணியின் வெற்றியில் முக்கியப் பங்கு வகுத்து வருகின்றனர். லீக் சுற்றில் இரண்டாவது இடம் பிடித்த சென்னை அணி , அரையிறுதியில் கோவாவை வென்றது.
லீக் சுற்றில் பெங்களூருவை அதன் சொந்த மண்ணில் வென்றுள்ளதால் , சென்னை அணி கூடுதல் நம்பிக்கையில் உள்ளது. சென்னை அணியில் ஜேஜே நடப்புத் தொடரில் 9 கோல்கள் அடித்து அசத்தியுள்ளார். சென்னை அணி இரண்டாவது முறையாகவும், பெங்களூரு அணி முதல் முறையாகவும் கோப்பையை வெல்லும் முனைப்பில் ஆயத்தமாகி வருகின்றன.