இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் ஐபிஎல் போட்டியின் போது தங்களின் உடற்தகுதியில் கவனம் கொள்ளவேண்டும் என்று கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டி, ஒவ்வொரு வருடமும் நடந்து வருகிறது. 12 ஆவது ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா வரும் 23 ஆம் தேதி தொடங்கி மே மாதம் 12ஆம் தேதி முடிவடையவுள்ளது. இதனையடுத்து உலகக் கோப்பை 2019 மே 30 தேதி தொடங்கவுள்ளது. இதனால் இந்திய கிரிக்கெட் அணியின் வீரர்கள் ஐபிஎல் போட்டியில் பங்கேற்பது குறித்து பலரும் பல்வேறு கருத்துகளை தெரிவித்து வந்தனர். பிசிசிஐயும் தேர்வுக்குழு இந்திய வீரர்கள் ஐபிஎல் விளையாடுவது தொடர்பாக முடிவெடுக்கும் என்று கூறியிருந்தது.
இந்நிலையில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதில், “ஐபிஎல் போட்டிகளில் வீரர்கள் விளையாடுவது குறித்து அணி உரிமையாளர்களுக்கு எவ்வித அறிவுறுத்தலும் கொடுக்கப்படவில்லை. ஐபிஎல் போட்டிகளில் விளையாடினாலும், உலகக்கோப்பையைக் கருத்தில் கொண்டு இந்திய அணி வீரர்கள் தங்களது உடல்தகுதியில் கவனம் கொள்ளவேண்டும். ஒவ்வொரு வீரரும் அவரின் உடல் நிலைக்கு ஏற்றவாறு போட்டிகளில் விளையாட வேண்டும்.
ஏனென்றால் என்னுடைய உடல்நிலைக்கு நான் 10 முதல் 15 போட்டிகளில் விளையாட முடியும். அதேபோல மற்றவர்கள் தங்களின் உடல் தகுதிக்கு இணங்க ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்க வேண்டும். மேலும் ஐபிஎல் தொடரில் வீரர்கள் நன்றாக விளையாடினால் அந்த மனபலத்தை உலகக் கோப்பைக்கும் எடுத்து செல்ல முடியும்” என தெரிவித்துள்ளார்.