இந்திய அணிக்காக 104 போட்டிகள்... - 'இந்திய கால்பந்தாட்ட கடவுள்' பைசுங் பூட்டியா!

இந்திய அணிக்காக 104 போட்டிகள்... - 'இந்திய கால்பந்தாட்ட கடவுள்' பைசுங் பூட்டியா!
இந்திய அணிக்காக 104 போட்டிகள்... - 'இந்திய கால்பந்தாட்ட கடவுள்' பைசுங் பூட்டியா!
Published on

இந்திய கால்பந்தாட்டத்தின் ஜாம்பவான் பைசுங் பூட்டியா தன்னுடைய 46 ஆவது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். சச்சின் டெண்டுல்கரை இந்திய கிரிக்கெட்டின் கடவுள் என ரசிகர்கள் அழைப்பது போல, இந்திய கால்பந்தாட்டத்தின் கடவுளாக திகழ்ந்தார் பைசுங் பூட்டியா.

1976இல் சிக்கிம் மாநிலத்தில் பிறந்தவர் பூட்டியா. இவரது தந்தை ஒரு விவசாயி. பூட்டியாவுக்கு இரண்டு அண்ணன்களும், ஒரு தங்கையும் உள்ளனர். பள்ளியில் படிப்பதற்கு பெரிய வசதி இல்லை என்ற சூழ்நிலையில், கால்பந்துதான் தன்னுடைய எதிர்காலம் என முடிவெடுத்தார், தேர்ந்தெடுத்தார். அப்போது அவருக்கு வயது வெறும் 8. சிறப்பாக கால்பந்து விளையாடுகிறார் என்பதால் ஸ்காலர்ஷிப் கிடைத்தது. அதன் மூலம் கால்பந்தாட்டத்துக்கு தேவையான அனைத்து வசதிகளும் பூட்டியாவுக்கு கிடைக்க ஆரம்பித்தது.

சிக்கிம் மாநிலத்தின் சிறந்த கால்பந்தாட்ட வீரர் என்ற அங்கீகாரம் பைசுங் பூட்டியாவுக்கு 16 வயதில் கிடைத்தது. ஆனாலும் சிக்கிம் மாநிலத்தில் இருந்துக்கொண்டு கால்பந்தாட்ட வீரர்களின் கவனத்தை ஈர்ப்பது கடினம் என்பதால் கால்பந்தை கொண்டாடும் கொல்கத்தாவுக்கு சென்றார் பூட்டியா. பள்ளிப் படிப்பை உதறிவிட்டு ஈஸ்ட் பெங்கால் எப்.சி கிளப் அணிக்கு விளையாடச் சென்றார். தொடர்ந்து சிறப்பாக விளையாடியதால் அடுத்த இரண்டரை ஆண்டுகளில் இந்திய அணியில் இடம் கிடைத்தது.

1995 ஆம் ஆண்டு தாய்லாந்து அணிக்கு எதிரான நேரு கோப்பை போட்டியில் அறிமுகமானார் பூட்டியா. மிரட்டலான ஆட்டத்தின் மூலம் கால்பந்தாட்ட ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த பூட்டியாவுக்கு அதன்பின்பு ஏறுமுகம்தான். 2009 ஆம் ஆண்டு நேரு கோப்பை போட்டியில் விளையாடிய போது, சர்வதேச அரங்கில் இந்திய அணிக்காக நூறு போட்டிகளில் ஆடிய முதல் வீரர் என்ற சாதனையை படைத்தார். 2011 ஆம் ஆண்டு காயம் காரணமாக கால்பந்து போட்டிகளில் அவரால் கலந்து கொள்ள முடியவில்லை இதனையடுத்து தன்னுடைய ஓய்வை அறிவித்தார் பூட்டியா.

இந்திய அணிக்காக 104 போட்டிகளில் ஆடி 40 கோல்களை அடித்துச் சாதனை புரிந்தார் பூட்டியா. இவரது சாதனைகள் தெற்காசிய கால்பந்து கூட்டமைப்பு சாம்பியன்ஷிப் (சாப் கோப்பை) 3 முறை பட்டம் (1997, 1999, 2005) – நேரு கோப்பை (2007, 2009), எப்சி சேலஞ் கோப்பை (2008) – 1984க்குப் பிறகு ஆசிய கோப்பை போட்டியில் விளையாட தகுதி, 1996, 2006 இல் தகுதிச் சுற்று, 2011ல் இறுதிப் போட்டி வரை முன்னேற்றம் – தெற்காசிய விளையாட்டு கோப்பை (1995), எல்ஜி கோப்பை (2002) – 1995 மற்றும் 2008ல் ஏஐஐஎப்-ன் ஆண்டின் சிறந்த வீரர் விருது. அர்ஜுனா மற்றும் பத்மஸ்ரீ விருது பெற்றவர்.

ஓய்வுக்கு பின்பு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்த பூட்டியா, 2014 நாடாளுமன்ற தேர்தல், 2016 சட்டமன்ற தேர்தலில் அக்கட்சி சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். பின்பு அக்கட்சியிலிருந்து விலகி ‘ஹம்ரோ சிக்கிம்’ என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கி செயல்பட்டு வருகிறார். பின்பு சிக்கிம் மாநிலத்தில் கால்பந்தாட்டத்தை ஊக்குப்படுத்துவதற்காக அகாடெமியும் தொடங்கியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com