சர்வதேச வாள்வீச்சு போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார் சென்னையை சேர்ந்த வீராங்கனை. அடுத்து ஒலிம்பிக் போட்டியை இலக்காகக் கொண்டு இவர் தீவிர பயிற்சியை மேற்கொண்டுவருகிறார்.
வாள்வீச்சில் இந்தியாவின் நம்பர் ஒன் வீராங்கனை பவானி தேவி. இதுவரை சர்வதேச வாள்வீச்சு போட்டியில் நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றாலே பெரிய சாதனை என்று இருந்து வந்த நிலையில், அண்மையில் ஐஸ்லாந்து நாட்டில் நடைபெற்ற சாட்டிலைட் உலகக்கோப்பை வாள்வீச்சு போட்டியில் சாபேர் பிரிவில் பிரிட்டன் வீராங்கனை சாரா ஜேன் ஹாம்சனை வீழ்த்தி இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கத்தை வென்று வரலாற்றை மாற்றி அமைத்துள்ளார் பவானி தேவி.
தற்போது வாள்வீச்சில் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமாக ஜொலிக்கும் இவர், பெற்றோர் தனக்கு அளித்த நம்பிக்கையும், ஊக்கமுமே தனது சாதனைக்கு காரணம் என்கிறார்.
தற்போது தரவரிசையில் உலக அளவில் 36-வது இடத்தில் உள்ள இவர், ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெரும் முனைப்பில் வாள் வீசி வருகிறார். தரவரிசை பட்டியலில் முதல் 16 இடங்களை பிடிப்பவர்கள் நேரடியாக ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறுவார்கள் என்பதால் இனி பங்கேற்க உள்ள அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டியது மிகவும் அவசியமான ஒன்று என்கிறார் வாள்வீச்சு பயிற்சியாளர்.
ஒவ்வொரு வெற்றியும் ஒலிம்பிக் போட்டிக்கான படிகளே என்பதால் இனி வரப்போகும் போட்டிகளுக்காக சீறுகிறது பவானியின் வாள்.