தமிழகத்தை சேர்ந்த யார்க்கர் மன்னன் தங்கராசு நடராஜன் இந்திய அணிக்காக ஆஸ்திரேலியாவில் விளையாடி வருகிறார். அண்மையில் நடைபெற்ற ஆஸ்திரேலிய அணி உடனான மூன்றாவது ஒருநாள் போட்டியில் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுக வீரராக களம் இறங்கிய அவர் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியிருந்தார். இந்திய அணியின் வெற்றிக்காக பங்களிப்பு டி20 போட்டிகளிலும் தொடர்கிறது.
ஆஸ்திரேலியாவுடனான முதல் டி20 போட்டியில் முதல் முறையாக சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடிய நடராஜன் நான்கு ஓவர்கள் 30 ரன்களை கொடுத்து மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார். அதில் ஆஸ்திரேலியாவின் அதிரடி பேட்ஸ்மேன்கள் மேக்ஸ்வெல்லின் விக்கெட்டும் அடங்கும். LBW முறையில் மேக்ஸ்வெல் காலி செய்தார் நடராஜன்.
இந்நிலையில் ட்விட்டரில் அந்த ஆட்டம் குறித்த அனுபவத்தை பகிர்ந்துள்ளார் நடராஜன் “என்றென்றும் மறக்க முடியாத ஆட்டம். இப்போதும் சரி… எப்போதும் சரி… முன்னேறுவோம்” என கேப்ஷன் கொடுத்துள்ளார்.
முதல் டி20 போட்டியில் நடராஜன் அசத்தலாக பந்துவீசி 3 விக்கெட் வீழ்த்தியதை தமிழக ரசிகர்களும் கொண்டாடி வருகின்றனர். கிரிக்கெட்டை பிடிக்காதவர்கள் கூட நடராஜனை வாழ்த்தி வருகின்றனர். ஏழ்மை நிலையில் இருந்து போராடி இப்படியொரு நிலையை எட்டியுள்ள அவரது வாழ்க்கைப் பின்னணி பலரையும் கலங்க வைத்துள்ளது. பலருக்கு உத்வேகம் அளித்துள்ளது.