எனது வாழ்க்கை படமானால் நானே அந்த கதாபாத்திரத்தில் நடிக்க விரும்புகிறேன் என இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலி ராஜ் தெரிவித்துள்ளார்.
மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி இந்திய மகளிர் அணி இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது. உலகக்கோப்பை தொடர் வரலாற்றில் இந்திய மகளிர் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெறுவது இது இரண்டாவது முறை. இதனை சாத்தியமாக்கிக் காட்டியவர் மிதாலிராஜ். இதனால் அவர் சமீபகாலமாக பிரபலமாகி வருகிறார்.
இந்நிலையில் மிதாலி ராஜுக்கு நடிக்க விருப்பம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் கூறூகையில், “கிரிக்கெட் வீராங்கனையான நீங்கள் கிளாமர் உடை அணிந்து அழகிகள் அணிவகுப்பில் பங்கேற்றது ஏன் என்கிறார்கள். வித்தியாசமான உடை அணிவது நல்ல அனுபவம். பொதுவாக விளையாட்டு அரங்கில் இருக்கும்போது டிரவுசர், டிராக்பேன்ட் தான் அணிந்திருப்போம். அது வசதியாக இருந்தபோதிலும் சில சமயம் மாறுபட்ட அனுபவம் தேவைப்படுகிறது. அமீர்கான் படங்களை மட்டும் தவறாமல் பார்த்துவிடுவேன். எனது வாழ்க்கை படத்தை கன்னடத்தில் எடுக்க அனுமதி கேட்கிறார்கள். எனது வாழ்க்கை படம் பற்றி நான் வெளிப்படையாகவே இருக்கிறேன். ஆனால் கன்னடத்தில் வேண்டாம். ஏனென்றால் கன்னடம் எனக்கு அவ்வளவாக பேச வராது. அதேபோல் எனது கதாபாத்திரத்தில் நானே நடிக்கவும் விருப்பம் இருக்கிறது” என்கிறார்.
ஏற்கெனவே கிரிக்கெட் நட்சத்திரங்களான தோனி, சச்சின் ஆகியோரின் வாழ்க்கை வரலாறு சினிமாவாகி இருக்கிறது. சச்சின் படத்தில் சச்சினே தனது கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.