இந்திய கிரிக்கெட் அணியின் வாஷிங்டன் சுந்தர் மற்றும் ஷரதுல் தாக்கூரை மனதார பாராட்டினார் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி. இருவரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்ட் கிரிக்கெட்டில் 123 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்து இந்திய அணியை சரிவிலிருந்து மீட்டதே இந்த பாராட்டுக்கு காரணம்.
காபாவில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியா 369 ரன்களும், இந்தியா 336 ரன்களும் குவித்துள்ளன. ரோகித், கில், புஜாரா, ரஹானே, மயங்க் அகர்வால், பண்ட் என இந்திய அணியின் பிரதான பேட்ஸ்மேன்கள் 186 ரன்களுக்கு எல்லாம் விக்கெட்டை இழக்க, வாஷிங்டன் சுந்தரும், தாக்கூரும் பொறுப்பாக விளையாடி அணியை மீட்டனர்.
அரசியல் கட்சிகள் தேர்தல் நேரத்தில் வைக்கும் சர்ப்ரைஸ் கூட்டணிபோல அமைந்திருந்தது வாஷிங்டன் சுந்தர் மற்றும் தாக்கூருக்கு இடையிலான பேட்டிங் கூட்டணி. அவர்களது ஆட்டத்தை பார்த்து அசந்துபோன கோலி “களத்தில் அபாரமான பங்களிப்பு மற்றும் அசத்தலான நம்பிக்கையை வாஷிங்டன் சுந்தரும், தாக்கூரும் வெளிக் கொண்டு வந்தார்கள். டெஸ்ட் கிரிக்கெட்டின் அசல் ஆட்டம் இது. நிதானமாக விளையாடிய சுந்தருக்கும், தாக்கூருக்கும் வாழ்த்துகள்” என தெரிவித்துள்ளார். அத்தோடு அவர்களுக்கு கைதட்டுவது மற்றும் சூப்பர் என்ற ஸ்மைலிகளையும் சேர்த்துள்ளார்.
இந்திய அணி இப்போதைக்கு இந்த ஆட்டத்தில் 54 ரன்கள் பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் இரண்டு நாள் ஆட்டம் எஞ்சியுள்ளது. நாளை முழுவதும் ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்தாக வேண்டும். அப்போதுதான் 350 ரன்களுக்கு மேலாவது அந்த அணியால் இந்தியாவுக்கு இலக்கு நிர்ணயிக்க முடியும்.
படம் : நன்றி BCCI