இந்தியா - இங்கிலாந்து இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாளை குஜராத் மாநிலம் அகமதாபாதில் இருக்கும் சர்தார் வல்லபாய் படேல் மைதானத்தில் பகலிரவுப் போட்டியாக நடைபெறுகிறது.
ஏற்கெனவே சென்னையில் நடைபெற்ற இரண்டு டெஸ்ட் போட்டிகளில் ஒன்றில் இங்கிலாந்தும் மற்றொன்றில் இந்தியாவும் வென்றுள்ளது. இந்நிலையில் தொடரில் முன்னிலை பெறுவதற்காக இந்தப் போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்தப் போட்டி இந்தியாவில் நடைபெறும் இரண்டாவது பகலிரவு டெஸ்ட் போட்டி. முதல் பகலிரவு டெஸ்ட் போட்டி வங்கதேசம் அணிக்கு எதிராக இந்தியா கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் ஏற்கெனவே விளையாடி இருக்கிறது.
இப்போது உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமாக உருவாகியுள்ள அகமதாபாத் ஸ்டேடியத்தில் இதுவரை எந்த இந்திய கிரிக்கெட் வீரர் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியிருக்கிறார்கள் என்பதை பார்க்கலாம்.
அனில் கும்பளே
இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் அனில் கும்பளே இந்த மைதானத்தில் மொத்தம் 36 விக்கெட்டுகள் வீழ்த்தி முதலிடத்தில் இருக்கிறார். இந்த மைதானத்தில் மட்டும் 420.4 ஓவர்கள் வீசி மொத்தம் 964 ரன்களை விட்டுக்கொடுத்துள்ளார். அவரது எகானமி 2.29 என அசர வைக்கிறது. 2001 இல் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இரு இன்னிங்ஸ் சேர்த்து 10 விக்கெட் வீழ்த்தியுள்ளார். மேலும் தனது பேட்டிங் மூலம் அரைசதமும் அடித்துள்ளார் கும்பளே.
ஹர்பஜன் சிங்
மொடேரா மைதானத்தில் கும்பளேவுக்கு அடுத்தபடியாக அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் ஹர்பஜன் சிங். இங்கு மட்டும் அவர் மொத்தம் 29 விக்கெட்டுகளை எடுத்தார். மொத்தம் 381.3 ஓவர்கள் வீசிய அவர் இரு முறை 5 விக்கெட்டுகளையும், ஒரு முறை 10 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். 2005 இல் இலங்கைக்கு எதிரான போட்டியின் ஒரு இன்னிங்ஸில் 7 விக்கெட் எடுத்தார் ஹர்பஜன். அப்போது அவருக்கு ஆட்டநாயகன் விருதும் கிடைத்தது.
கபில் தேவ்
இந்திய அணிக்காக முதல் உலகக் கோப்பையை பெற்று தந்த கேப்டனும் தலைச்சிறந்த பவுலரான கபில் தேவ் இந்த மைதானத்தில் 14 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இந்த மைதானத்தில் வெறும் 3 போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ள அவர் 108.3 ஓவர்களை வீசியுள்ளார். இந்த மைதானத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இரண்டாவது இன்னிங்ஸில் கபில் தேவ் 9 விக்கெட்டுகளை கைப்பற்றியது வரலாற்று நிகழ்வு.
பிரக்யான் ஓஜா
இடக்கை சுழற்பந்துவீச்சாளரான பிரக்யான் ஓஜா இங்கு 2 போட்டிகளில் விளையாடி மொத்தம் 13 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார். தன்னுடைய முதல் டெஸ்ட் போட்டியில் 56 ஓவர்கள் வீசி 4 விக்கெட்டுகளை எடுத்தார். பின்பு தன்னுடைய அடுத்த டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் 9 விக்கெட் வீழ்த்தி அசத்தினார் பிரக்யான் ஓஜா.
ஜவகல் ஸ்ரீநாத்
இந்த மைதானத்தில் 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இருக்கும் ஸ்ரீநாத் மொத்தம் 13 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 1996 இல் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட்டில் 68 ரன்கள் விட்டுக்கொடுத்து 8 விக்கெட் வீழ்த்தினார். அந்தப் போட்டியில் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார் ஸ்ரீநாத்.