இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி அண்மையில் முடிந்த ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்காக விளையாடி 14 ஆட்டங்களில் 20 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். அதே பார்மில் ஆஸ்திரேலியாவுக்கு பறந்துள்ள அவர், அயல்நாட்டு மண்ணிலும் சிறப்பாக பந்து வீசி பெஸ்ட் பேட்ஸ்மேனின் விக்கெட்டை வீழ்த்தும் வல்லமையும், உறுதியும் கொண்டவர்கள் இந்திய பவுலர்கள் என தெரிவித்துள்ளார்.
கடந்த முறை இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சென்றிருந்தபோது 2-1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை வென்றது. பும்ரா, ஷமி மற்றும் இஷாந்த் ஷர்மாவின் வேகப்பந்து வீச்சு கூட்டணியும் அதற்கு முக்கிய காரணம். இந்நிலையில் இந்த கருத்தை ஷமி தெரிவித்துள்ளார்.
“எந்தவித ஈகோவும் பார்க்காமல் நாங்கள் எல்லோரும் ஒரே இலக்கை அடைவதற்காக விளையாடுவது தான் இந்த வெற்றிக்கு காரணம். எங்களுக்குள் ஆரோக்கியமான போட்டிதான் இருக்கும். பவுலிங்கில் பார்ட்னர்ஷிப் போட்டு நாங்கள் விக்கெட்டுகளை வேட்டையாடுவோம். மணிக்கு 140 kph மேல் எங்களால் பந்து வீச முடியும். ஆஸ்திரேலிய ஆடுகளங்களில் அது தான் வேண்டும். சவால்கள் எங்களுக்கு பிடிக்கும். அதனை எதிர்கொள்ள எங்களிடம் அனுபவமும் உள்ளது. எங்களது ரிசர்வ் பவுலர்கள் கூட அதே வேகத்தில் பந்து வீச கூடியவர்கள்.
அதேபோல சுழற்பந்திலும் வெரைட்டியான ஆப்ஷன்கள் உள்ளன. இந்திய அணியில் உள்ள உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களுக்கு தான் நாங்கள் வலைப்பயிற்சியில் பந்து வீசுவோம். இதனால் உலக தரமான பேட்ஸ்மேனாக இருந்தாலும் அவரை அவுட் செய்ய ஒரு நல்ல பந்து போதும் என்பது எங்களது நம்பிக்கை” என சொல்கிறார் ஷமி.
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் 4 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது.