ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்டின் இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி 9 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் மட்டுமே எடுத்து டிக்ளேர் செய்தது. இதனால், 90 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இது, இந்திய ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி 36 ரன்களை மட்டுமே எடுத்ததன் மூலம் டெஸ்ட் போட்டி வரலாற்றில், ஒரு இன்னின்ஸில் இந்தியா எடுத்த மிகக் குறைவான ரன்களாக இது பதிவாகியிருக்கிறது. இதற்கு முன்பு 1974ல் இங்கிலாந்துக்கு எதிராக லார்ட்ஸில் 42 ரன்கள் எடுத்ததே இந்தியாவின் மிகக்குறைந்த இன்னிங்ஸ் ரன்களாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலிய அணியுடனான முதல் டெஸ்ட் போட்டியில் அடிலெய்ட் மைதானத்தில் விளையாடி வருகிறது. முதல் இன்னிங்ஸில் இந்தியா 244 ரன்களும், ஆஸ்திரேலியா 191 ரன்களும் குவித்தன. இரண்டாம் நாள் ஆட்டத்தின் எஞ்சிய ஓவர்களில் இந்தியா இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடியது.
9 ரன்களுக்கு ஒரு விக்கெட்டை இழந்த நிலையில், மூன்றாம் நாள் ஆட்டத்தை தொடர்ந்தது இந்தியா. நைட் வாட்ச்மேனாக களம் இறங்கிய பும்ரா 2 ரன்களுக்கு கம்மின்ஸ் வேகத்தில் வீழ்ந்தார். அதற்கடுத்த மூன்று ஓவர்கள் ரன் எடுத்துவும் எடுக்காத நிலையில் மீண்டும் கம்மின்ஸ் பந்து வீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் விக்கெட்டை இழந்தார் புஜாரா.
தொடர்ந்து கோலி கிரீஸுக்கு வர ஹேசல்வுட் வீசிய அடுத்த ஓவரில் மயங்க் அகர்வாலும் 9 ரன்களில் பெவிலியன் திரும்பினார். ஹேசல்வுட்டின் அதே ஓவரில் ரஹானே டக் அவுட்டானார். அதனால் 15 ரன்களுக்கு 5 விக்கெட்டை இழந்து தடுமாறியது இந்தியா.
கம்மின்ஸ் வீசிய அடுத்த ஓவரில் கோலியும் 4 ரன்களில் அவுட்டானார். தொடர்ந்து விக்கெட் சாஹாவும் ஹேசல்வுட் பந்துவீச்சில் 4 ரன்களில் வெளியேறினார். அடுத்த பந்திலேயே அஷ்வினும் டக் அவுட்டானார். அதேநேரத்தில் விஹாரியும் ஹேசல்வுட்டின் அதற்கடுத்த ஓவரில் 8 ரன்களில் அவுட்டானார். இதையடுத்து இது நிஜம் தானா என ரசிகர்கள் குழம்பி போயுள்ளதாக சமூக வலைதளங்களில் தெரிவித்துள்ளனர்.
இரண்டாவது இன்னிங்ஸில் இந்தியா 36 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்துள்ளது. அதேநேரத்தில் இந்த ஆட்டத்தில் இந்தியா 89 ரன்கள் முன்னிலையில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆஸ்திரேலியாவுக்காக ஹேசல்வுட் 5 விக்கெட்டுகளை, கம்மின்ஸ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர்.