விளையாட்டு வீரர்கள் ஒரு அணியாக இணைந்து விளையாடும் கிரிக்கெட், ஃபுட்பால் மாதிரியான விளையாட்டுகளில் தனியொரு வீரரின் ஆட்டம் அந்த ஆட்டத்தின் போக்கையே ஒட்டுமொத்தமாக மாற்றிவிடும். அப்படிப்பட்ட ஒரு வீரர் தான் இந்திய கிரிக்கெட் அணியின் இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பண்ட். இந்திய அணி நெருக்கடியில் இருக்கும் போதெல்லாம் ஆபத்பாந்தவனாக பண்ட் அவதரிப்பது சமீப காலமாக வழக்கமாகிவிட்டது. அப்படி ஒரு அவதாரத்தை அவர் இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் எடுத்திருந்தார்.
இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொதப்பிய நிலையில் ஆறாவது பேட்ஸ்மேனாக களம் இறங்கிய பண்ட் அற்புதமான இன்னிங்ஸ் விளையாடி இந்திய அணிக்கு ஆட்டத்தில் கம்பேக் கொடுத்திருப்பார். ரிஷப் பண்ட் கிரீஸுக்கு வந்த போது இந்திய 80 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்திருந்தது. அதன் மூலம் முதல் இன்னிங்ஸில் இந்தியா 160 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
ஒத்தை ஆளாக களத்தில் நின்று மாஸான இன்னிங்ஸ் விளையாடிய மான்ஸ்டர் என பண்ட் ஆடிய இன்னிங்க்ஸை வார்த்தைகளால் விவரிக்கலாம். இங்கிலாந்து அணியின் சுழல் மற்றும் வேகப்பந்து வீச்சாளர்களை அடித்து துவம்சம் செய்து விட்டார். அதன் விளைவாக அவரது இன்னிங்ஸில் 13 பவுண்டரிகளும், 2 சிக்ஸர்களும் பறக்க விட்டிருப்பார் பண்ட்.
பவுலர்கள் வீசும் நல்ல பந்துகளை (Good Ball) அடிக்காமல் விடுவதும், மோசமான பந்துகளை அடித்து ஆடுவதும் தான் பேட்ஸ்மேன்களுக்கு அழகு என்பார்கள். அதை பண்ட் சிறப்பாக செய்திருந்தார். ஆண்டர்சன், ஸ்டோக்ஸ், ஜேக் லீச், டாம் பேஸ், ஜோ ரூட் என இங்கிலாந்து பவுலர்களை ஒரு கை பார்த்தார்.
81 பந்துகளில் அரை சதம் கடந்து நிதானமாக பந்தை தரையோடு தரையாக தட்டி தட்டி ஆடிய பண்ட், அதற்கடுத்த 34 பந்துகளில் வானவேடிக்கை காட்டி சதம் கடந்து அசத்தினார். அதுவும் 94 ரன்களில் இருந்த போது பந்தை சிக்ஸருக்கு விளாசுவதெல்லாம் அற்புதமான மொமெண்ட்ஸ்.
குறிப்பாக ஆண்டர்சன் வீசிய 81வது ஓவரின் முதல் பந்தை ரிவர்ஸ் ஸ்வீப் ஆடி, ஸ்லிப் ஃபீல்டரின் தலைக்கு மேலாக பந்தை பண்ட் பவுண்டரிக்கு பறக்க விட்டெதெல்லாம் வேற லெவல் ஆட்டம். அவரது ஷாட் செலெக்ஷனும் படு நேர்த்தியாக இருந்தது. வாஷிங்டன் சுந்தருடன் 113 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்திருந்தார் பண்ட்.
20 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் விளையாடியுள்ள பண்ட் பின்வரிசையில் களம் இறங்கியிருந்தாலும் அதில் 6 அரை சதமும், 3 சதமும் விளாசியுள்ளார்.
ரிஷப் பண்ட்டின் இந்த அபார ஆட்டத்தை கிரிக்கெட் வீரர்கள் பலரும் பாராட்டி வருவதோடு, இங்கிலாந்து அணியை அவர் வச்சி செஞ்சதை நெட்டிசன்களும் தெறிக்கவிட்டுக் கொண்டிருக்கிறார்கள். மாஸ்டர் படத்தில் வரும் ஸ்டில்லை பண்டோடு சேர்த்து பலரும் பதிவிட்டுள்ளார்கள்.
இது முதலும் அல்ல முடிவும் அல்ல
பண்ட் இங்கிலாந்து அணிக்கு எதிராக ஆடிய அசுரத்தனமான ஆட்டத்தை பார்த்து மெய்சிலிர்ந்து போன முன்னாள் இந்திய கேப்டன் சவுரவ் கங்குலி பண்டை மனதார பாராட்டியுள்ளார்.
“நெருக்கடியான நேரத்தில் என்ன ஒரு அற்புதமான ஆட்டம். இது முதலும் அல்ல முடிவும் அல்ல. வரும் நாட்களில் அனைத்து பார்மெட் கிரிக்கெட்டிலும் ஆகச்சிறந்த வீரராக இருப்பீர்கள். இது போல பந்தை அடித்து ஆடும் வல்லமை கொண்ட திறனை தொடருங்கள். அதனால் தான் நீங்கள் மேட்ச் வின்னராகவும், ஸ்பெஷலிஸ்ட் பேட்ஸ்மேனாகவும் இருக்கிறீர்கள்” என கிரிக்கெட்டின் தாதா கங்குலி சொல்லியுள்ளார்.
வெற்றி பார்முலாவை தொடருங்கள் பண்ட்…
-எல்லுச்சாமி கார்த்திக்