2024 சுவிஸ் ஓபன் டென்னிஸ் தொடரானது ஸ்விட்சர்லாந்தில் நடைபெற்று வருகிறது. ஆடவர் இரட்டையர் பிரிவுக்கான இறுதிப்போட்டியானது ஞாயிற்றுக்கிழமையான இன்று Gstaad-ல் உள்ள ராய் எமர்சன் அரங்கில் நடைபெற்றது.
இறுதிப்போட்டியில் சிறப்பாக செயல்பட்ட இந்தியாவின் யூகி பாம்ப்ரி மற்றும் பிரான்ஸின் அல்பானோ ஜோடி, நடப்பாண்டு ஏப்ரல் மாதம் பவேரியன் சர்வதேச டென்னிஸ் சாம்பியன்ஷிப்பை வென்ற கையோடு தங்களுடைய இரண்டாவது பட்டத்தையும் தட்டிசென்றது.
ஏடிபி 250 களிமண் மைதானத்தில் நடைபெற்ற ஆடவர் இரட்டையர் பிரிவின் இறுதிப்போட்டியில், இந்தியாவின் யூகி பாம்ப்ரி மற்றும் பிரான்ஸின் அல்பானோ ஒலிவெட்டி ஜோடியானது, பிரான்ஸ் ஜோடியான உகோ ஹம்பர்ட் மற்றும் ஃபேப்ரைஸ் மார்ட்டின் இணைகள் மோதிக்கொண்டன.
முதல் செட்டை 6-3 என பிரெஞ்ச் இணையான ஹம்பர்ட் மற்றும் மார்ட்டின் ஜோடி தட்டிச்செல்ல, இரண்டாவது செட்டில் கம்பேக் கொடுத்த யூகி பாம்ப்ரி மற்றும் அல்பானோ ஜோடி 6-3 என கைப்பற்றி பதிலடி கொடுத்தது. மூன்றாவது செட்டில் இரண்டு இணைகளும் விட்டுக்கொடுக்காமல் போராட ஆட்டமானது டைபிரேக்கர் வரை சென்றது. டைபிரேக்கரில் 10-6 என வென்ற இந்தியாவின் யூகி பாம்ப்ரி மற்றும் பிரான்ஸ் அல்பானோ ஒலிவெட்டி ஜோடி சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது.
யூகி பாம்ப்ரிக்கு இது 3வது ஏடிபி டைட்டிலாகும், யூகி பாம்ப்ரி மற்றும் அல்பானோ ஜோடிக்கு இது இரண்டாவது டைட்டிலாகும். நடப்பாண்டில் இந்த ஜோடி இரண்டு பட்டங்களை வென்று அசத்தியுள்ளனர்.