வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற மூன்றாவது ஒரு நாள் போட்டியில் வெற்றிப் பெற்று இந்திய அணி தொடரை கைப்பற்றியது. கடைசிப் போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிப் பெற்றது இந்திய அணி.
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையேயான மூன்றாவது மற்றும் இறுதி ஒருநாள் போட்டி இன்று ஒடிஷாவில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பவுலிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து முதல் பேட்டிங்கை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியில் தொடக்க வீரர் எவின் லெவிஸ் 21 (50) ரன்களில் விக்கெட்டை இழந்தார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான சாய் ஹோப் நிதானமாக ஆடி 42 (50) ரன்களில் அவுட் ஆனார்.
பின்னர் ஜோடி சேர்ந்த ரோஸ்டன் சேஸ் மற்றும் சிம்ரான் ஹெட்மெயர் நிலைத்து நின்று ஆடினர். ஹெட்மெயர் 37 (33) ரன்களில் வெளியேற, சேஸ் 38 (48) ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார். பின்னர் ஜோடி சேர்ந்த பூரன் மற்றும் பொலார்ட், அணியின் ஸ்கோரை உயர்த்தினர். அதிரடியாக விளையாடிய பூரன் 64 பந்துகளில் 89 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார்.
பந்து வீச்சை விளாசிய பொலார்ட் அரை சதம் அடித்தார். இறுதிவரை விக்கெட்டை இழக்காத அவர், 51 பந்துகளில் 74 ரன்களை குவித்தார். 50 ஓவர்கள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 315 ரன்கள் குவித்தது. இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ரோகித் சர்மாவும், கே.எல்.ராகுலும் அதிரடியாக விளையாடினர். இருவரும் இணைந்து 122 ரன்கள் குவித்தனர். இதில் ரோகித் சர்மா 63 ரன்களும், கே.எல்.ராகுல் 77 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். இதற்கடுத்து வந்த கேப்டன் கோலி மிகவும் பொறுமையுடன் ரன்களைச் சேர்த்தார்.
ஆனால், கோலிக்கு துணையாக நிற்க வேண்டிய ரிஷப் பன்ட், ஸ்ரேயாஸ் ஐயர், கேதர் ஜாதவ் ஆகியோர் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். இதனையடுத்து வந்த ஜடேஜா கோலிக்கு துணையாக நின்றார். இதனையடுத்து வேகமாக ரன்களை குவிக்க தொடங்கிய கோலி 85 ரன்னில் ஆட்டமிழந்தார். ஆனால் ஜடேஜாவும், ஷர்துல் தாக்கூர் இறுதி நேரத்தில் அதிரடியாக விளையாடி இலக்கை எட்டி இந்திய அணியை வெற்றிப்பெற வைத்தனர். இந்தத் தொடரின் நாயகனாக ரோஹித் சர்மா தேர்வு செய்யப்பட்டார். இந்திய அணியின் ேகேப்டன் கோலிக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.