மீண்டும் சூப்பர் ஓவரில் இந்திய அணி வெற்றி - தொடரும் நியூசிலாந்தின் சோகம்..!

மீண்டும் சூப்பர் ஓவரில் இந்திய அணி வெற்றி - தொடரும் நியூசிலாந்தின் சோகம்..!
மீண்டும் சூப்பர் ஓவரில் இந்திய அணி வெற்றி - தொடரும் நியூசிலாந்தின் சோகம்..!
Published on

நியூசிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டி20 போட்டியில் இந்திய அணி சூப்பர் ஓவரில் த்ரில் வெற்றி பெற்றது.

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 4-வது டி20 போட்டி வெலிங்டன் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் காயம் காரணமாக விளையாடவில்லை. கேப்டனாக பொறுப்பேற்றுள்ள டிம் சவுத்தி டாஸ் வென்று பவுலிங் செய்ய முடிவெடுத்தார். இந்திய அணியில் ரோகித் சர்மா, ஷமி, ஜடேஜாவுக்கு ஓய்வளிக்கப்பட்டு சஞ்சு சாம்சன், வாஷிங்டன் சுந்தர், நவ்தீப் சைனிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.

முதலில் விளையாடிய இந்திய அணியில் பேட்டிங் சரியாக அமையவில்லை. 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 8 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் எடுத்தது. மணிஷ் பாண்டே 36 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். கே.எல்.ராகுல் 39(26) ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தர். கேப்டன் விராட் கோலி உட்பட மற்ற வீரர்கள் சொதப்பினர். நியூசிலாந்து அணி தரப்பில் சோதி 3 விக்கெட் வீழ்த்தினார்.

166 ரன்கள் என்ற இலக்குடன் விளையாடிய நியூசிலாந்து அணியில் குப்தில் 4 ரன்னில் ஆட்டமிழந்த போதும், முன்ரோ(64), செஃபெர்ட்(57) ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். நியூசிலாந்து அணி வெற்றி பெறும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இந்தப் போட்டியும் சமனில் முடிந்தது. இறுதி ஓவரில் நான்கு விக்கெட் வீழ்ந்தன. நியூசிலாந்து அணியும் 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் மட்டுமே எடுத்தது. போட்டி சமனில் முடிந்ததால் சூப்பர் ஓவருக்கு சென்றது.

சூப்பர் ஓவரில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 13 ரன்கள் எடுத்தது. பின்னர், 14 ரன்கள் என்ற இலக்குடன் இந்திய அணிக்காக கேப்டன் விராட் கோலி, கே.எல்.ராகுல் களமிறங்கினர். ராகுல் முதல் பந்தில் சிக்ஸர், இரண்டாவது பந்தில் பவுண்டரி விளாசினார். மூன்றாவது பந்தில் ராகுல் கேட்ச் ஆகி ஆட்டமிழந்தார். நான்காவது பந்தில் கோலி இரண்டு ரன்கள் எடுத்தார். அடுத்த பந்தில் கோலி பவுண்டரி விளாச இந்திய அணி சூப்பர் ஓவரில் வெற்றி பெற்றது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com