பெங்களூரு மைதானத்தில் நேற்று இந்தியாவுக்கும் ஆப்கானிஸ்தானுக்கு இடையே நடைபெற்ற டி20 போட்டியில், இந்திய அணி நிர்ணயித்த 212 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆப்கானிஸ்தான் அணி களமிறங்கியது.
தொடக்க வீரர்கள் குர்பாஸ் மற்றும் சட்ரான் அரைசதம் கடக்க, பின்னர் வந்த குல்பாதின் ஒரு புறம் அதிரடியாக விளையாட, நபி 34 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார். இருப்பினும் குல்பாதின் சிறப்பாக விளையாடி அரைசதம் கடக்க, கடைசி பந்தில் 3 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், குல்பாதின் 2 ரன்கள் மட்டுமே எடுத்தார்.
இதனால் இரு அணிகளின் ஸ்கோரும் சமனானது. வெற்றியை தீர்மானிக்க சூப்பர் ஓவர் நடத்தப்பட்டடது. முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் 16 ரன்கள் எடுக்க, இந்தியாவும் 16 ரன்கள் எடுத்து சூப்பர் ஓவரும் சமனானது. மீண்டும் 2 ஆவது முறையாக சூப்பர் ஓவர் நடத்தப்பட்டது.
இதில் இந்தியா 11 ரன்கள் எடுக்க, ஆப்கானிஸ்தான் ஒரு ரன்கள் மட்டுமே எடுத்து 2 விக்கெட்களை இழந்து தோல்வியை தழுவியது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி தொடக்கத்தில் விக்கெட்களை இழந்து திணறினாலும், ரோகித் சர்மா சதம் விளாச, ரிங்கு சிங் அரைசதம் விளாசினார். இதனால், 20 ஓவர்கள் முடிவில் இந்தியா 4 விக்கெட்கள் இழப்பிற்கு 212 ரன்கள் குவித்திருந்தது.
3 வது டி20 போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம், இந்தியா தொடரை முழுமையாக கைப்பற்றியது. ஆட்ட நாயகனாக ரோகித் சர்மாவும், தொடர் நாயகனாக சிவம் துபேவும் தேர்வு செய்யப்பட்டனர்.