டெல்லியில் 18ஆம் தேதி தொடங்கி நேற்று நிறைவடைந்த உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய அணி 15 தங்கம் உட்பட 30 பதக்கங்களைப் பெற்று முதலிடம் பிடித்தது.
பிப்ரவரி 2019 லிருந்தே துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியா முதலிடம் வகித்துவருகிறது. இதில் 53 நாடுகளைச் சேர்ந்த 294 வீரர்கள் பங்கேற்றனர். இந்த ஆண்டு போட்டியின் துவக்கத்திலிருந்தே இந்திய அணி சிறப்பாக விளையாடி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இந்தப் போட்டியில் அமெரிக்கா மற்றும் இத்தாலியை பின்னுக்குத் தள்ளி 15 தங்கம், 9 வெள்ளி மற்றும் 6 வெண்கலப் பதக்கங்களைப் பெற்று இந்தியா முதலிடத்தைப் பிடித்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பெண்கள் அணிக்கான போட்டியில் ஸ்ரேயாசி சிங், மனீஷா கீர் மற்றும் ராஜேஸ்வரி குமாரி ஆகிய மூன்று பேரும் கஜகஸ்தானை 6-0 என்ற கணக்கில் சுலபமாக வீழ்த்தி தங்கம் வென்றனர். அவர்களுக்குப் பின்னர் ஸ்லோவேக்கியாவுக்கு எதிராக போட்டியிட்ட கைனன் செனாய், பிரித்விராஜ் தொண்டைமான் மற்றும் லக்ஷய் ஷெரான் ஆகிய மூன்றுபேரும் 6-4 என்ற கணக்கில் வெற்றிபெற்று இரண்டாவது தங்கத்தை வென்றனர்.
முன்னதாக, அமெரிக்காவுக்கு எதிரான ஆண்களுக்கான 25 மீட்டர் ரேபிட் ஃபயர் பிஸ்டல் அணிகள் பிரிவில் குர்ப்ரீத் சிங், விஜய்வீர் சித்து மற்றும் ஆதர்ஷ் சிங் ஆகியோர் 2-10 என்ற கணக்கில் தோல்வியடைந்து வெள்ளிப்பதக்கம் பெற்றது.
பதக்கம் பெற்ற 22 நாடுகளில் இந்தியா 30 பதக்கம் பெற்று முதலிடத்தையும், அமெரிக்கா 8 பதக்கம் பெற்றும் 2ஆம் இடத்தையும் மற்றும் இத்தாலி 4 பதக்கம் பெற்று 3ஆம் இடத்தையும் பிடித்தது. உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் சிறப்பாக ஆடிய இந்திய அணியைச் சேர்ந்த வீரர்கள் ஒலிம்பிக்கில் பங்கேற்க தேர்வாகியுள்ளனர்.